வாரி இறைக்கப்பட்ட பணத்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
வாரி இறைக்கப்பட்ட பணத்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
ADDED : மார் 09, 2025 06:51 AM

தாஜ்பூர்: ஹரியானாவில் திருமண ஊர்வலத்தின் போது வாரி இறைக்கப்பட்ட பணம் கூரையில் விழுந்ததை அடுத்து, அதை எடுக்கச் சென்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் தாஜ்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பணக்காரர்களில் ஒருவரின் குடும்பத்தில் திருமணம் நடந்தது. இதற்கான ஊர்வலம், தாஜ்பூரின் முக்கிய சாலை வழியாகச் சென்றது. அப்போது, திருமண மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஊர்வலத்தில் சென்றவர்கள், ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்தபடி சென்றனர். சாலையில் சிதறி ஓடிய ரூபாய் நோட்டுகளை, அந்த வழியாகச் சென்றவர்கள் எடுத்துச் சென்றனர்.
திருமண கோஷ்டியினர் வாரி இறைத்த நோட்டுகளை, பொதுமக்களுடன் சேர்ந்து சாலையில் சென்ற 14 வயது சிறுவன் ஹிமான்ஷுவும் அள்ளிச் சென்றான். சில ரூபாய் நோட்டுகள் அப்பகுதியில் இருந்த வீட்டின் கூரையின் மேல் விழுந்தன. பணத்தின் மீதான ஆசையால், அவற்றை எடுக்க ஹிமான்ஷு ஆவலுடன் ஓடினான்.
கூரை மீது ஏறி பணத்தை எடுக்கும் போது, அங்கு சென்ற உயரழுத்த மின்சார கம்பியின் மீது சிறுவனின் கை பட்டது. அடுத்த சில வினாடிகளில் ஹிமான்ஷு மீது மின்சாரம் பாய்ந்தது. உடல் முழுதும் தீப்பற்றிய நிலையில், துாக்கி எறியப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானான்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பணத்தை வாரி இறைத்த திருமண கோஷ்டியினரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. உயிரிழந்த சிறுவன் ஹிமான்ஷு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகன் என்றும் தெரிய வந்துள்ளது.

