நாடு முழுதும் 140 பொதுக்கூட்டம் : லோக்சபா தேர்தலுக்கு பிரதமர் தயார்
நாடு முழுதும் 140 பொதுக்கூட்டம் : லோக்சபா தேர்தலுக்கு பிரதமர் தயார்
UPDATED : ஜன 21, 2024 05:13 AM
ADDED : ஜன 20, 2024 10:42 PM

லோக்சபா தேர்தல் பிரசார பணிகளை அதிரடியாக துவக்கும் பா.ஜ., அடுத்த மாதத்தில் இருந்து பிரமாண்ட பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுதும் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, பிப்ரவரியில் 140 பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தல் வியூக பணிகளை ஏற்கனவே இறுதி செய்துவிட்ட பா.ஜ., தலைமை, அடுத்த மாதம் முதல் முழுவீச்சில் களத்தில் இறங்கி பிரசாரத்தை துவக்க உள்ளது.
![]() |
பிரசாரம்
இதன் ஒரு பகுதியாக, 'கிராமங்களுக்கு செல்வோம்' என்ற பிரசார இயக்கத்தை அடுத்த மாதம், 4ம் தேதி முதல் 11 வரை பா.ஜ., நடத்துகிறது.இத்திட்டத்தில், நாடு முழுதும் உள்ள ஏழு லட்சம் கிராமங்களில், மோடி ஆட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க திட்டமிடப் பட்டுள்ளது.கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும், 51 சதவீத ஓட்டுகளை இத்திட்டத்தின் வாயிலாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போதும் இதே போன்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இது வாக்காளர்களை நேரடியாக சென்று சேர பெரிதும் உதவியதாக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.
ஏழு முதல் எட்டு லோக்சபா தொகுதிகளை, 'கிளஸ்டர்' எனப்படும் தொகுப்பாக பா.ஜ., தலைமை அறிவித்துஉள்ளது.ஒவ்வொரு தொகுப்புக்கும் தேர்தலில் போட்டியிடாத உள்ளூர் பா.ஜ., பிரமுகர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுப்பில் உள்ள ஏதாவது ஒரு தொகுதிக்கு பிரதமர் நேரில் வந்து பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். பிரமாண்ட பொதுக் கூட்டமோ அல்லது சிறிய அளவிலான ஊர்வலமோ நடத்தப்படும்.
மேலும், அந்த தொகுப்பின் பொறுப்பாளருடன் பிரதமர் கலந்துரையாடி வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் தலைமையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிய உள்ளார்.
வெவ்வேறு தொகுதி
இதன் வாயிலாக தற்போதைய எம்.பி.,க்கள் மற்றும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்திறனை கட்சி தலைமை மதிப்பிட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் அடங்கிய பொறுப்பாளர்கள் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர்.தவிர, அடுத்த மாதத்திலிருந்து பிரமாண்ட பொதுக் கூட்டங்களுக்கு பா.ஜ., தலைமை ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுதும் 140 பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
- நமது சிறப்பு நிருபர்-


