கிணற்றில் வீசப்பட்ட 17 கிலோ தங்க நகைகள்: கர்நாடக போலீசார் உசிலம்பட்டியில் மீட்டது எப்படி
கிணற்றில் வீசப்பட்ட 17 கிலோ தங்க நகைகள்: கர்நாடக போலீசார் உசிலம்பட்டியில் மீட்டது எப்படி
ADDED : ஏப் 02, 2025 05:09 AM

தாவணகெரே: கர்நாடகாவில், வங்கியில் 17.7 கிலோ நகைகளை கொள்ளையடித்த கும்பலை ஐந்து மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி கிணற்றில் வீசப்பட்டிருந்த நகைகளை மீட்டது எப்படி என்பது குறித்து, போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், தாவணகெரே நியாமதி டவுனில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது.நள்ளிரவில், ஜன்னல் கம்பிகளை உடைத்து, வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்கள், லாக்கரை உடைத்து, 13 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 கிலோ 705 கிராம் நகைகளை கொள்ளை அடித்து தப்பினர்.
இதில், வடமாநில கொள்ளையர்கள் ஈடுட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். துப்பு கிடைக்காத நிலையில், சில தினங்களுக்கு முன், சந்தேகத்தின் அடிப்படையில் நியாமதியின் மஞ்சுநாத், 32, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், வங்கியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.
மஞ்சுநாத் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, நியாமதியில் பேக்கரி நடத்தி வந்த, தமிழகத்தின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் விஜய்குமார், 30, அஜய்குமார், 28, இவர்களின் உறவினர் பரமானந்தா, 30, நியாமதியின் அபிஷேக், 23, சந்துரு, 23 ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து, கிழக்கு மண்டல ஐ.ஜி., ரவிகாந்தே கவுடா நேற்று அளித்த பேட்டி:
விஜய்குமார், அஜய்குமார் பல ஆண்டுகளாக நியாமதியில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இவர்கள், தொழிலை விரிவுபடுத்துவதற்காக வங்கிக்கு சென்று, 15 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளனர்.
கடன் தருவதாக, அவர்களிடம் லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியர்கள் கடன் வழங்காமல் இழுத்தடித்துள்ளனர்.ஆத்திரமடைந்த சகோதரர்கள், வங்கியை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினர். இதற்காக, 'மணி ஹெய்ஸ்ட்' என்ற வெப் சீரிஸ் மற்றும் 'யு டியூப்' பார்த்து, வங்கியில் கொள்ளை அடிப்பது குறித்த நுட்பங்களை, ஆறு மாதங்களாக கற்றுள்ளனர்.
விஜய்குமாருக்கு அந்த வங்கியில் கணக்கு இருந்தது. இதனால் அடிக்கடி வங்கிக்கு சென்று வங்கிக்குள் எப்படி நுழையலாம்; லாக்கர் எங்கு உள்ளது என்பது பற்றி அறிந்து கொண்டார்.
வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்த பின், குரங்கு தொப்பி, கையுறைகள், அணிந்திருந்த கருப்புநிற ஆடைகள், காஸ் கட்டர், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை ஏரியில் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
கொள்ளையடித்த தங்க நகைகளில் ஒரு பகுதியை மட்டும் விற்று, அதில் கிடைத்த 3 லட்சம் ரூபாயில், தலா 1 லட்சம் ரூபாயை அபிஷேக், மஞ்சுநாத், சந்துருவுக்கு கொடுத்தது தெரியவந்தது.
மீதமுள்ள நகைகளை, அவர்களது சொந்த ஊரான உசிலம்பட்டியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெட்டியுடன் வீசியுள்ளனர். சில மாதங்களுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்.
உசிலம்பட்டிக்கு அவர்களை அழைத்துச் சென்று, 30 அடி ஆழமுள்ள கிணற்றில், நீச்சல் வீரர்கள் உதவியுடன் நகைகளை மீட்டுள்ளோம். பல பெட்டிகளில் இருந்து 17 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
கொள்ளையடித்த பின், போலீசாரிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, தாவணகெரேயில் உள்ள சக்தி வாய்ந்த சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று, ஆறு பேரும் தரிசனம் செய்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

