செல்வப்பெருந்தகைக்கு எதிராக 25 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி
செல்வப்பெருந்தகைக்கு எதிராக 25 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி
ADDED : பிப் 19, 2025 04:38 AM

தமிழக காங்கிரசில் உள்ள அதிருப்தி மாவட்ட தலைவர்கள், 25 பேர் தனி கோஷ்டியாக செயல்படுவதுடன், டில்லி சென்று கார்கேவிடம், மாநில தலைமை மீது புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
எதிர்ப்பு
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பின், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, 'கட்சி பணிகளில் சரிவர செயல்படாத மாவட்டத் தலைவர்களை மாற்றிவிட்டு, புதியவர்கள் நியமிக்கப்படுவர்' என, அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு இணைய தளம் வாயிலாக, 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, தமிழக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. கட்சியில் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில், 25க்கும் மேற்பட்டவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களில் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி., செல்லக்குமார், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் ஓரணியாக திரண்டனர். கட்சி தலைமை நடத்திய, 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்களை, அவர்கள் புறக்கணித்தனர்.
அதிருப்தி
அவர்களை சமதானப்படுத்தும் வகையில், 'ஜனநாயகம் காக்க, விண்ணப்ப நடைமுறை அவசியம்; கட்சி பணியாற்ற ஏராளமானோர் காத்திருக்கின்றனர். வேலை செய்யும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட மாட்டார்கள்' என, செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார். ஆனாலும், அழகிரி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆதரவு மாவட்டத் தலைவர்கள், செல்வப்பெருந்தகைக்கு எதிராக திரும்பிஉள்ளனர்.
சென்னையில் நேற்று முன்தினம் அவர்கள் தனி கூட்டம் நடத்தி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, அதிருப்தி மாவட்ட தலைவர்கள் 25 பேர் டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து, மாநில தலைமை மீது முறையிட உள்ளனர்.
- நமது நிருபர் -