காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் 25 மாவட்ட தலைவர்கள் புகார் கடிதம்
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் 25 மாவட்ட தலைவர்கள் புகார் கடிதம்
ADDED : ஜன 09, 2025 05:14 AM

'துப்புரவு பணியாளர் தேர்வுக்குக் கூட தகுதி நிர்ணயிக்கும் காலத்தில், 140 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியில், மாவட்ட தலைவர்கள் தேர்வுக்கு எந்த தகுதியும் தேவையில்லை; பணம் மட்டுமே பிரதானம் என்ற அணுகுமுறையை மாற்ற வேண்டும்' என, மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
'தமிழக காங்கிரசில் உள்ள 77 மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கு தலா, 5,000 ரூபாய், மாநில நிர்வாகிகள் பதவிக்கு, 1,000 ரூபாய் விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாற்ற கூடாது
இதற்கு, மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி என்பது கடைச்சரக்கா என்றும், அந்த சுற்றறிக்கை வேலைவாய்ப்பு விளம்பரமா என்றும் கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசிக்க, மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.
நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அஜோய் குமாரை சந்தித்து, கட்சியின் 25 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர்.
அக்கடிதத்தில், 'தகுதி படைத்த, சிறப்பாகச் செயல்படுகிற மாவட்ட தலைவர்களை மாற்றக் கூடாது. மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனு கட்டணம் நிர்ணயிக்கக்கூடாது.
துப்புரவு பணியாளர் தேர்வுக்குக் கூட தகுதி நிர்ணயிக்கும் காலத்தில், 140 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியில், மாவட்ட தலைவர்கள் தேர்வுக்கு எந்த தகுதியும் தேவையில்லை; பணம் மட்டுமே பிரதானம் என்ற அணுகுமுறையை மாற்ற வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குமுறல்
அக்கடிதத்தை படித்த பின், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அஜோய் குமார், 'வேலை செய்கிற மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட மாட்டார்கள். அதேசமயம் விருப்ப மனு கட்டணம் அவசியம்.
'தற்போதைய மாவட்ட தலைவர்கள் யாரும் பணம் கட்ட வேண்டிய தேவையில்லை' எனக் கூறி, போர்க்கொடி துாக்கிய மாவட்ட தலைவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இதற்கிடையில், 'கொள்கை காக்க அணி திரள்வோம்; அடித்தளம் அமைக்க களம் காண்போம்' என்ற தலைப்பில், கட்சியின் கிராம கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காமராஜர் விருது பெறும் தங்கபாலுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் இரவில், மேலிட பொறுப்பாளரை சந்தித்து குமுறலை கொட்டிய அதிருப்தி மாவட்ட தலைவர்கள், இந்த கூட்டத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக பங்கேற்றனர்.
- நமது நிருபர் -

