நகை சேமிப்பு திட்டத்தில் சேருவோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு: தங்கம் விலை உயர்வால் ஏற்பட்ட மாற்றம்
நகை சேமிப்பு திட்டத்தில் சேருவோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு: தங்கம் விலை உயர்வால் ஏற்பட்ட மாற்றம்
ADDED : அக் 19, 2024 03:27 AM

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், மொத்த பணம் கொடுத்து நகை வாங்க முடியாது என்ற காரணத்தால், பலரும் நகை கடைகளில் உள்ள மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். முதலீடு செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இதனால், மாநிலம் முழுதும் சிறியது, பெரியது என, மொத்தம் உள்ள 35,000 நகை கடைகளில் தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன.
தீபாவளி, அக் ஷய திருதியை போன்ற சுப தினங்களில், மொத்த பணமும் கொடுத்து நகை வாங்க முடியாதவர்கள், நகை கடைகளில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து, மாதம் 1,000 முதல் 10,000 ரூபாய் வரை முதலீடு செய்கின்றனர்.
சலுகைகள்
சுப தினம் வந்ததும், சேமிப்பு திட்டத்தில் சேர்த்த பணத்தை எடுத்து நகை வாங்குகின்றனர். சேமிப்பு திட்டத்தில் சேருவோருக்கு பரிசு பொருட்கள், செய்கூலி இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சில நாடுகளுக்கு இடையில் நிலவும் போர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் வைப்பு நிதிக்கான டிபாசிட் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 7,160 ரூபாய்க்கும்; சவரன், 57,280 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 103 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 7,240 ரூபாயாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, 57,920 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 105 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 1ம் தேதி, 47,820 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆபரண தங்கம் சவரன் விலை தற்போது 58,000 ரூபாயை எட்டிஉள்ளது. பத்து மாதங்களில் மட்டும் சவரனுக்கு, 10,180 ரூபாய் அதிகரித்து உள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக தங்கம் விலை மிகவும் அதிகரித்து வருகிறது.
முன்பதிவு
எனவே, மொத்தமாக பணம் கொடுத்து வாங்க சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால், பலரும் நகை கடைகளில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கடையில் மாதம், 1,000 பேர் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவீதம் பேர் சேருகின்றனர்.
தீபாவளிக்கு நகை வாங்க விரும்புவோர், வரும் நாட்களில் விலை மேலும் உயரும் எனக்கருதி, தற்போது பணம் செலுத்தி முன்பதிவு செய்கின்றனர். இதனால், தங்கம் விலை உயர்ந்து வந்தாலும், விற்பனை வழக்கமான அளவில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.