2 ஆண்டுகளில் மாயமான இந்திய இளைஞர்கள் 29,000! வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்று 'சைபர்' கும்பலிடம் சிக்கியது அம்பலம்
2 ஆண்டுகளில் மாயமான இந்திய இளைஞர்கள் 29,000! வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்று 'சைபர்' கும்பலிடம் சிக்கியது அம்பலம்
ADDED : அக் 26, 2024 03:22 AM

புதுடில்லி: வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு, 2022 ஜனவரி முதல், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு சென்ற 29,000 இந்திய இளைஞர்கள் மாயமாகி உள்ளனர்.
'ஆன்லைன்' வாயிலாக பணம் பறிக்கும், 'சைபர்' குற்றங்களுக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அவர்கள் நினைத்தாலும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில், பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
'ஆன்லைன்' எனப்படும், 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் உலகையே இன்று ஆட்டிப்படைக்கிறது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டன.
தகவல் பரிமாற்றத்துக்கான சமூக ஊடக செயலிகளில் துவங்கி, உணவு டெலிவரி, பணப்பரிமாற்றம் என எல்லாமே ஒரு, 'கிளிக்' என்ற நிலை. கையில், 'மொபைல் போன்' இருந்தால், உட்கார்ந்த இடத்தில் இருந்து எதையும் செய்து முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்ப பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக இந்தியா இதில் முன்னிலையில் உள்ளது. அதே நேரம், இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நடக்கும் குற்றங்களும் அதிகரித்துஉள்ளன.
இந்தியாவில் மட்டும் 2024, ஜன., முதல் ஏப்., வரையிலான காலகட்டத்தில், சைபர் குற்றங்கள் வாயிலாக 1,750 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர்.
இதற்கு பின்னணியில், 'சைபர் அடிமை வளையம்' என்ற மிகப் பெரிய நெட்வொர்க் உள்ளது. உட்கார்ந்த இடத்தில் இருந்து, இணையம் மற்றும் மொபைல் போன் வாயிலாக மக்கள் பணத்தை கோடி கோடியாக அந்த கும்பல் சுரண்டி வருகிறது. இது ஒரு சர்வதேச வலைப்பின்னல்.
இந்த சைபர் குற்றங்களை நிகழ்த்த இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேச இளைஞர்களையே இந்த கும்பல் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன.
இரையாவது எப்படி?
'சைபர் அடிமை வளையம்' என்றழைக்கப்படும் இந்த சைபர் மோசடி நெட்வொர்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து செயல்படுகின்றன. குறிப்பாக கம்போடியா, லவோஸ் போன்ற நாடுகள் தான் குற்ற தலைநகரங்களாக உள்ளன.
இவர்கள், 'பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு இணையதளங்கள் வாயிலாக, வெளிநாட்டு வேலைக்கான விளம்பரங்களை வெளியிடுகின்றனர். இவர்களின் இலக்கு 20 முதல் 39 வயது வரையிலான இளைஞர்கள்.
நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம், உயர் பதவிகள் என ஆசைகாட்டுகின்றனர். பெரும்பாலும், கஸ்டமர் சர்வீஸ், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் போன்ற வேலைகள் என கூறப்படுவதால் இளைஞர்கள் எளிதில் இரையாகின்றனர்.
விண்ணப்பிக்கும் இளைஞர்களை சுற்றுலா விசாவில் வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறது.
அதை நம்பி செல்லும் இளைஞர்களை விமான நிலையம் வந்து அழைத்து செல்லும் மோசடி கும்பல், அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு, பயிற்சியை துவங்குகின்றனர்.
கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்போரை தொலைபேசியில் அழைத்து அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுவது, கிரிப்டோ கரன்சி வர்த்தகம் என்ற பெயரில் மோசடி, போலி கடன் வழங்கும் திட்டங்கள் வாயிலாக ஏமாற்றுவது, சமூகவலைதளங்களில் பெண் போல பேசி பழகி பணம் பறிப்பது எப்படி என, பல வகையான சைபர் குற்றங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.
அப்போது தான் தாங்கள் சிக்கிக் கொண்ட விபரமே இளைஞர்களுக்கு தெரியவருகிறது. அதன் பின் அவர்கள் நினைத்தாலும் அந்த சைபர் சிறையில் இருந்து அவர்கள் வெளியேற முடியாது. அன்று முதல், 'சைபர் அடிமைகள்' என்ற முத்திரை குத்தப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஜின் பெய் குரூப், தி கிங்ஸ் ரோமன்ஸ் குரூப், பிரின்ஸ் குரூப் போன்ற நெட்வொர்க்குகள், இந்த சைபர் குற்ற வலைப்பின்னலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
குற்ற சிலந்தி
கடந்த 2022 ஜன., முதல், 2024 மே வரையிலான காலகட்டத்தில், சுற்றுலா விசாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணித்த 29,000 இந்திய இளைஞர்கள் நாடு திரும்பவில்லை. அவர்கள் எங்கிருக்கின்றனர்; என்ன செய்கின்றனர் என்ற தகவல் மர்மமாகவே உள்ளன.
இவர்கள் கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்துஉள்ளனர். 70 சதவீதம் பேர் சென்றது தாய்லாந்துக்கு தான்.
இவர்கள் அனைவரும், 'சைபர் அடிமை வளையம்' என்ற அந்த குற்ற சிலந்தியில் சிக்கியிருக்கக்கூடும் என தெரிகிறது.
இந்த சைபர் குற்றங்கள் குறித்து, 'வஞ்சக வலை: தென்கிழக்கு ஆசியாவில் நாடு கடந்த சைபர் அடிமைத்தனம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை புரிந்துகொள்வது' என்ற தலைப்பில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் தான், இந்த பகீர் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.