தமிழகத்தில் 30 பொருட்கள் புவிசார் குறியீடுக்காக காத்திருப்பு
தமிழகத்தில் 30 பொருட்கள் புவிசார் குறியீடுக்காக காத்திருப்பு
ADDED : அக் 16, 2025 12:31 AM

: நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெற்று, தமிழகம் முன்னிலை வகிக்கும் நிலையில், மேலும் 30 பொருட்களின் விபரங்கள் அனுப்பப்பட்டு, புவிசார் குறியீடுக்காக காத்திருக்கின்றன.
தமிழக உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில், காப்புரிமை தகவல் மையம் செயல்படுகிறது.
இது, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து, காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக குறியீடுகள், தொழில் துறை வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள், அறிவுசார் சொத்துரிமை பெறுவதற்கான உதவிகளை வழங்குகிறது.
முக்கியமாக, தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் தயாராகும் உணவுப்பொருட்கள், கலைப் பொருட்கள் உள்ளிட்டவற் றுக்கு, புவிசார் குறியீடு பெற, 40 கல்வி நிறுவனங்களில், புவிசார் குறியீடு ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.
புவிசார் குறியீடு பெறும்போது, தேசிய அளவில், அந்த பொருளின் நம்பகத்தன்மை அதிகரிப்பதுடன், வர்த்தக வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றன. அந்த பொருள் தயாரிக்கப்படும் ஊருக்கும் பெருமை கிடைக்கிறது.
அந்த வகையில், இதுவரை, தஞ்சாவூர் வீணை, தட்டு, திண்டுக்கல் பூட்டு, கொல்லிமலை காபி, வந்தவாசி கோரைப்பாய், மதுரை அப்பளம், கன்னியாகுமரி நன்னாரி உட்பட 68 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு மட்டும், 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு உள்ளன.
இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு பாரம்பரிய, தனித்தன்மையான பொருளுக்கு, புவிசார் குறியீடு பெற இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
தற்போது, விவசாயம் சார்ந்த பொருட்கள் 10; உணவு மற்றும் பானங்கள் 6; கைத்தறி மற்றும் நெசவு 2; கைவினை மற்றும் அலங்காரப் பொருட்கள் 7 உட்பட மொத்தம் 30 பொருட்களுக்கான விபரங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
அவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும், சுயசார்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -