ஹிந்திக்கு தடை விதிக்கும் தமிழக அரசு? 'இண்டி' கூட்டணி தலைவர்கள் கொந்தளிப்பு
ஹிந்திக்கு தடை விதிக்கும் தமிழக அரசு? 'இண்டி' கூட்டணி தலைவர்கள் கொந்தளிப்பு
ADDED : அக் 15, 2025 11:48 PM

: ஹிந்தி பேசும் மிக முக்கியமான மாநிலமான பீஹாரில், சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் ஹிந்திக்கு முழு தடை விதிக்க, தி.மு.க., முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல், காங்கிரஸ் கட்சியை எரிச்சல் அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் ஹிந்தி திணிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு புதிய மசோதா. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
விளம்பர பலகைகள், அரசு அலுவலகங்கள், விலாசங்கள் ஆகியவற்றில், ஹிந்தி இடம்பெறுவதை தடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என கூறப்படுகிறது.
தி.மு.க., அரசின் இந்த முடிவு, தேசிய அரசியலில் புகைச்சலை ஏற் படுத்தியுள்ளது. குறிப்பாக, தி.மு.க., அங்கம் வகிக்கும், 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.
ஹிந்தி பேசும் மாநிலமான பீஹாரில், நவ., 6 மற்றும் 11ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தமிழகத்தைப் போலவே மொழி என்பது இம்மாநில மக்களால் உணர்வுப்பூர்வமாக பார்க்கப்படுகிறது.
அப்படியிருக்கையில், 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., தமிழகத்தில் ஹிந்தியை தடுக்கப்போவதாக கிளம்பியிருப்பதை, தேர்தல் பிரச்சார களத்தில் பா.ஜ., தீவிரமாக கிளப்பப் போகிறது. இதனால் காங்கிரஸ் கடும் எரிச்சல் அடைந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மேலிட மூத்த தலைவர் கூறியதாவது:
'காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தள கட்சிகளின் மிக நெருங்கிய கூட்டாளியான தி.மு.க.,வின், ஹிந்தி மீதான வன்மத்தை பாருங்கள்' என, இந்த விவகாரத்தை மிகப்பெரிய அளவில் பா.ஜ., கொண்டு செல்லும். இது, இண்டி கூட்டணிக்கு, மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.
கடந்த 2023ல், தமிழக துணை முதல்வர் உதயநிதி, இதே போல, சனாதனம் குறித்து பேசினார். மிக முக்கியமான கால கட்டத்தில் இந்த சர்ச்சையை அவர் கிளப்பினார். இண்டி கூட்டணிக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு, அந்த சர்ச்சை சிக்கலை ஏற்படுத்தியது.
பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ஏதோ சமாளித்து, கருத்துக்களை கூறி ஒருவழியாக முடிவுக்கு வந்தாலும், அந்த சர்ச்சையை தேவைப்படும் போதெல்லாம் பா.ஜ., பேசி வருகிறது. இப்போது மீண்டும் ஹிந்தி என்ற வடிவில் வெடித்துள்ளது. இது கூட்டணிக்கு ஆரோக்கியமானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லியில், ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி., ஒருவர் கூறுகையில், ''தமிழகத்தில், ஆளும் தி.மு.க., அரசுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள சறுக்கல்களை சமாளிக்க, இந்த காய் நகர்த்தல் உதவலாம். ஆனால், தேசிய அளவிலான நிலவரம் தெரியாமல், தி.மு.க., இவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல,'' என்றார்.
-நமது டில்லி நிருபர்-