தென்மாவட்டங்களில் ஓராண்டில் 33,258 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்! 7272 வழக்குகள் பதிவு
தென்மாவட்டங்களில் ஓராண்டில் 33,258 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்! 7272 வழக்குகள் பதிவு
ADDED : டிச 13, 2024 07:23 AM

மதுரை : மதுரை உட்பட தென்மாவட்டங்களில் இந்தாண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரை 2098 கிலோ கஞ்சா, 27 ஆயிரத்து 458 கிலோ குட்கா, 3692 கிலோ கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தியதாக, விற்றதாக 1935 வழக்குகள், குட்கா விற்றதாக 3886 வழக்குகள், கூல் லிப் விற்றதாக 1451 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.
தென்மண்டல ஐ.ஜி.,யாக அஸ்ராகர்க் பொறுப்பேற்றதும் கஞ்சா வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டதோடு, கஞ்சா விற்று வாங்கிய சொத்துக்களை முடக்கினார். இதை தற்போது அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றமும் பாராட்டியது.
இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி.,யாக பிரேம் ஆனந்த் சின்ஹா இந்தாண்டு ஜூலையில் பொறுப்பேற்றார். திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதி ரவுடிகளை கட்டுப்படுத்தியதோடு, போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் தனிப்படைகளை அமைத்தார்.
கிலோ கணக்கில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததோடு, நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகமாக கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் மதுரையும், குட்கா வழக்கில் விருதுநகரும் முதலிடத்தில் உள்ளன.
அதேசமயம் தேனி, ராமநாதபுரம், துாத்துக்குடியில் மெத்தபெட்டமைன் போதை மருந்தும், மதுரை, விருதுநகர், தேனி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூல் லிப் பாக்கெட் விற்றதாக வழக்குப்பதிவு செய்ததில் தேனி முதலிடத்தில் உள்ளது.
தென்மாவட்டங்களில் ஓராண்டில் 7272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா, குட்கா உட்பட 33 ஆயிரத்து 258 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
![]() |
![]() |