4 லோக்சபா, 1 ராஜ்யசபா: அ.தி.மு.க., - தே.மு.தி.க., பேச்சு துவக்கம்
4 லோக்சபா, 1 ராஜ்யசபா: அ.தி.மு.க., - தே.மு.தி.க., பேச்சு துவக்கம்
UPDATED : மார் 07, 2024 05:33 AM
ADDED : மார் 06, 2024 11:01 PM

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக, நேற்று அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே பேச்சு நடந்தது. தே.மு.தி.க., அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ், துணைச் செயலர் பார்த்தசாரதி ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர், அவர்களை வரவேற்று பேச்சு நடத்தினர்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி என, நான்கு தொகுதிகளை, அ.தி.மு.க., ஒதுக்கியது. அதேபோல், இம்முறையும் நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.
பின், தே.மு.தி.க., அவைத் தலைவர் இளங்கோவன் அளித்த பேட்டி:பழைய நட்புணர்வோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். எதிர்காலத்தில் வெற்றி கூட்டணியாக அமையும். விரைவில் மீண்டும் சந்திப்போம். தற்போது இரண்டாம் கட்ட பேச்சு முடிந்துள்ளது. எத்தனை தொகுதிகள் என்பது அடுத்த கட்ட பேச்சில் தெரிவிக்கப்படும். கூட்டணி உறுதி என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க., அடம்
தே.மு.தி.க.,வை சேர்க்க, பழனிசாமி விரும்புகிறார். இதற்காக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அன்பழகன், பெஞ்சமின் ஆகியோரை அனுப்பி, பிரேமலதாவிடம்
பேச வைத்தார். அப்போது, 'நாங்களும் குழு அமைத்து, உங்களிடம் பேச அனுப்புகிறோம்' என பிரேமலதா கூறி அனுப்பினார். அதன்படி, சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ், இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று அ.தி.மு.க., குழுவினரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
சுதீஷ் ரகசியம்
ஆனால், தே.மு.தி.க., குழுவில் இடம்பெற்ற சுதீஷ் போகவில்லை. பா.ஜ., கூட்டணி தொடர்பாக, மத்திய அமைச்சர் முருகனுடன், சுதீஷ் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும், அதனால் போகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், அ.தி.மு.க., குழுவினருடன், 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த பேச்சில், தே.மு.தி.க.,விற்கு நான்கு லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு, தே.மு.தி.க., வெற்றிப் பெற்றது. அந்த தொகுதியை ஒதுக்கி தரும்படி பிரேமலதா கூறியதாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதை, பழனிசாமியிடம் எடுத்துக் கூறி அடுத்தகட்ட பேச்சுக்கு இன்று அழைப்பதாக, அ.தி.மு.க., குழுவினர் கூறி அனுப்பினர்.

