தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 'சீட்'; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு
தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 'சீட்'; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு
ADDED : டிச 16, 2025 05:21 AM

வரும் சட்டசபை தேர்தலில், 40 தொகுதி களில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க.,வின் இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு, திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடந்தது. வடக்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டுக்கு, துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை வழங்கினார். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் மாநாடு என்பதால், அம்மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதை உணர்த்தும் வகையில் உதயநிதி பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலில், இளைஞரணி நிர்வாகிகள் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். 'இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன் ஆகியோர் நிறைவேற்றி தர வேண்டும்' என்றார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும்கூட, சட்டசபை தேர்தலில் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில், 38 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., இளைஞரணி முடிவு செய்துள்ளது. அதனால், 40 தொகுதிகளை கட்சி தலைமையிடம் கேட்டு பெற முடிவெடுத்துள்ளார், இளைஞர் அணி செயலரான உதயநிதி.
இது குறித்து, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், இளைஞரணி செயலர் பதவியை உதயநிதி ஏற்றார். தமிழகம் முழுதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இளைஞரணி சார்பில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், பிரபாகர் ராஜா உட்பட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஈரோடு எம்.பி., பிரகாஷுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, தி.மு.க., இளைஞரணி நிர்வாகத்தின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 5 லட்சம் நிர்வாகிகள் தி.மு.க., இளைஞர் அணியில் உள்ளனர். அப்படியொரு கட்சி தி.மு.க., மட்டுமே.
சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க., சார்பில் அதிகளவில் இளைஞர்களை களமிறக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இம்முறை தி.மு.க., சார்பில் கூடுதல் எண்ணிக்கையில், கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க வேண்டும் என்பதில் உதயநிதி உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

