ADDED : மார் 17, 2024 02:40 AM

டில்லியில் உள்ள பல, 'டிவி' சேனல்கள் கருத்து கணிப்புகள் நடத்தி முடிவுகளை வெளியிட்டன. அனைத்துமே, 'பா.ஜ., தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, தெரிவித்து உள்ளன.
ஒரு கருத்து கணிப்பு, 'பா.ஜ., கூட்டணிக்கு, 400க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி கிட்டும்' என்கிறது. 'எதிர்க்கட்சி கூட்டணிக்கு 93 - -166 வரை கிடைக்கும்' என, பெரும்பாலான கருத்து கணிப்புகளும் சொல்கின்றன.
இவையெல்லாம் தேர்தலுக்கு முன் நடத்திய கணிப்புகள். ஓட்டுப்பதிவு நடக்கும் போது நடத்தும் கருத்து கணிப்புகள் தான், பெரும்பாலும் சரியாக இருக்கும்.
தேர்தலுக்கும் முன்பாக நடத்தப்படும் கருத்து கணிப்புகள், எந்த கட்சி ஜெயிக்கும் என்பதில் ஓரளவிற்கு சரியாக இருந்தாலும், இத்தனை சீட்களில் வெற்றி என்கிற கணிப்பு சரியாக வருவதில்லை.
என்.ஜி.ஓ., ஒன்று சமீபத்தில் நடத்திய சர்வேபடி, 25 சதவீதத்திலிருந்து 30 சதவீத வாக்காளர்கள் கடைசி தினத்தில் தான், யாருக்கு ஓட்டளிப்பது என்பதை முடிவு செய்கின்றனராம். இவர்களின் கடைசி நேர முடிவு, தேர்தல் ரிசல்ட்டுகளை மாற்றி விடும்.
ஒரே கட்சிக்கு பல தேர்தல்களில், 31 சதவீதத்தினர் ஓட்டளித்து வருகின்றனர்; 25 சதவீதத்தினர் யார் வேட்பாளர் என்பதை வைத்து ஓட்டளிக்கின்றனர்; 22 சதவீதத்தினர் கட்சிகளின் சின்னத்திற்கும்; 3 சதவீதத்தினர் தேர்தல் அறிக்கைக்கும் ஓட்டளிக்கின்றனர் என்கிறது அந்த சர்வே.
எனவே, தேர்தலுக்கு முன்பாக வரும் கருத்து கணிப்புகள் கட்சிகளின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
எது எப்படியோ... தமிழகத்தை பொறுத்தவரை ஒரே ஒரு விஷயம் தான் முடிவுகளை நிர்ணயிக்கிறது... அது, எந்த கட்சி அதிக பணம் கொடுக்கிறது என்பது தான்!

