முறைகேடாக வழங்கப்பட்ட 47 இலவச பட்டாக்கள் ரத்து: தஞ்சை மாவட்டத்தில் நடந்த மோசடி அம்பலம்
முறைகேடாக வழங்கப்பட்ட 47 இலவச பட்டாக்கள் ரத்து: தஞ்சை மாவட்டத்தில் நடந்த மோசடி அம்பலம்
ADDED : ஜன 06, 2025 12:01 AM

தஞ்சை மாவட்டத்தில், போலி ஆவணங்கள் அளித்து பட்டா பெற்றது அம்பலமாகி உள்ளது. முதல் கட்டமாக, 47 பட்டாக்களை ரத்து செய்து, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், நீர் நிலைகள் தவிர்த்து, பிறவகை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, இலவச பட்டா வழங்கும் திட்டம், 2006ல் அறிவிக்கப்பட்டது.
அரசுக்கு தேவைப்படாத, ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போர், இலவச பட்டா பெறலாம். ஆனால், வருவாய் துறையின் உள்ளூர் அலுவலர்கள் சிலர் துணையுடன், வசதியான நபர்கள் மோசடியாக, போலி ஆவணங்கள் அடிப்படையில் இலவச பட்டா பெறுவதாக புகார் எழுந்துள்ளது.
மோசடி
இதுகுறித்து, சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த ஸ்ரீராம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாலுகா, கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சுப்ரமணியன்.
ஸ்ரீ வைஷ்ணவி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான இவர், ஒரு மனைப்பிரிவு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தார். அதற்கு சட்டப்படி முறையான அங்கீகாரம் பெறவில்லை. அதில், சம்பந்தப்பட்ட நிலங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றோம்.
அப்போது, கதிராமங்கலம் கிராமத்தில், நத்தம் நிலங்களுக்கு, வெங்கடசுப்ரமணியன், அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டு பணியாளர்கள் பெயரில், மோசடியாக இலவச பட்டாக்கள் பெறப்பட்டது தெரியவந்தது.
கதிராமங்கலம், கூத்தனுார், பாபநாசம், உள்ளிக்கடை பகுதிகளில், இவர்கள் பெயரில், 100க்கும் மேற்பட்ட பட்டாக்கள் மோசடியாக வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வருவாய் துறையில் புகார் அளித்தோம். தற்போது, அந்த பட்டாக்களை வருவாய் துறையினர் ரத்து செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிரைய பத்திரங்கள்
இதுதொடர்பாக, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் துணை கலெக்டர் பிறப்பித்த உத்தரவு:
கதிராமங்கலம் கிராமத்தில், புகாரில் குறிப்பிடப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ததில், அவை நத்தம் மற்றும் காலி நிலம் வகைபாட்டில் உள்ளன. இதற்கு இலவச பட்டா பெறும் நோக்கில், கிரைய பத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இலவச பட்டா பெற்றவர், அதில், 3 ஆண்டுகளுக்குள் வீடு கட்டி குடியேற வேண்டும். ஆனால், அவர்கள் யாரும் வீடு கட்டி குடியேறவில்லை.
எனவே, கதிராமங்கலத்தில் வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்ட, 15 பேருக்கும், கூத்தனுார் கிராமத்தில், வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்ட, 32 பேருக்கும் வழங்கப்பட்ட இலவச பட்டாக்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-- நமது நிருபர் - -

