வேட்பாளர்களில் 50 சதவீதம் புதுமுகங்கள்: பா.ஜ., முடிவு
வேட்பாளர்களில் 50 சதவீதம் புதுமுகங்கள்: பா.ஜ., முடிவு
ADDED : ஜன 18, 2026 05:02 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிகளவில் புதுமுகங்களை களமிறக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.க., தலைமையுடன் , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு நடத்திய போது, '25 - 30 தொகுதிகள் வழங்கப்படும்' என, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற வேண்டும் என, கட்சி நிர்வாகிகளிடம் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்காக, பா.ஜ., சார்பில் பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.
அவர்களை தேர்வு செய்யும் பணியும், அமித் ஷா நேரடி மேற்பார்வையில் துவங்கியுள்ளது. பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் 50 சதவீதம், கட்சி கொள்கைகளை பாரம்பரியமாக பின்பற்றுவதோடு, கட்சி நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் புதுமுகங்களுக்கு ஒதுக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. மீதமுள்ள தொகுதிகள், கட்சி வளர்ச்சியில் ஈடுபடும் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

