6 'மாஜி'க்களின் எதிர்கோஷ்டிகளை 'கொம்பு' சீவி விட பழனிசாமி முடிவு?
6 'மாஜி'க்களின் எதிர்கோஷ்டிகளை 'கொம்பு' சீவி விட பழனிசாமி முடிவு?
ADDED : செப் 23, 2024 02:53 AM

அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேருக்கும் 'செக்' வைக்கும் வகையில், அவர்களின் சொந்த மாவட்டங்களில் உள்ள எதிர்கோஷ்டிகளை கொம்பு சீவி விட, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தன. இந்த தோல்விக்கு பின், பிரிந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் கூறி வருகின்றனர்.
அவர்களின் அறிவிப்பை நிராகரிக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, இனி ஒருபோதும் இடமில்லை' என்று கூறி வருகிறார்.
ஆனால், அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ள விரும்பும், ஆறு முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழுவினர், பழனிசாமியிடம் ஏற்கனவே ஒருமுறை முறையிட்டனர். அதை பழனிசாமி ஏற்கவில்லை. அதோடு, எதிரிகளோடு தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர் என்ற கோபமும் பழனிசாமிக்கு ஏற்பட்டுஉள்ளது.
இந்நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பில் தலா ஆறு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் தரப்பிலான குழுவுக்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும்; சசிகலா சார்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு முன்னாள் கொறடா நரசிம்மனும் தலைமை தாங்குகின்றனர்.
இவர்கள் தலைமையில் இடம் பெற்றுள்ள குழுவினர், அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய ஆறு பேர் குழுவிடம், கட்சி ஒற்றுமையை வலியுறுத்தி தொடர்ந்து ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'கட்சியை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய்விட்டனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நான்கு பேரை, மீண்டும் இணைப்பது என்ற பேச்சுக்கே இமில்லை' என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
இதையடுத்து, கட்சி ஒற்றுமைக்கு முயற்சிப்போரின் செயல்பாடுகளை, முயற்சியை முடக்கி போடும் வகையிலான பேச்சு என, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் அப்செட் ஆகி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,வில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு 'செக்' வைக்கும் வகையில், அவர்கள் சார்ந்துள்ள மாவட்டங்களில் உள்ள கட்சியின் எதிர்கோஷ்டியினருக்கு முக்கியத்துவம் தந்து, கொம்பு சீவி விடவும், பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் -.