6 தொகுதிகள் போதாது; 15 வரை கேட்போம்: திருமாவளவன் பேச்சால் தி.மு.க.,வில் திகுதிகு
6 தொகுதிகள் போதாது; 15 வரை கேட்போம்: திருமாவளவன் பேச்சால் தி.மு.க.,வில் திகுதிகு
ADDED : ஜூன் 19, 2025 01:19 AM

சென்னை: தி.மு.க., கூட்டணியில் 15 தொகுதிகள் வரை கேட்போம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கடந்த 2006ல் அ.தி.மு.க.,விடம் 9 தொகுதிகளை பெற்ற வி.சி., தற்போது 20 ஆண்டுகளாகியும் கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் எப்படியாவது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற்றுவிடும் என்ற ஆவலில் வி.சி.,க்கள் உள்ளனர்.
இந்நிலையில், 2021 தேர்தலில் பெற்றது போல 6 தொகுதிகள் போதாது; வரும் தேர்தலில் 15 தொகுதிகள் வரை கேட்போம் என வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒரு கட்சி நடத்தும் நானே, தி.மு.க.,வினரை வியப்பாக பார்க்கிறேன். அந்த அளவுக்கு அவர்கள் செயலாற்றுகின்றனர். கட்சியினை உயிர்ப்போடு வைத்துள்ளார்கள்.
அதனால் தான் 2026ல் தி.மு.க., ஆட்சியமைக்க போகிறது என அடித்துச் சொல்கிறேன். உடனே தி.மு.க., ஆட்சி அமைப்பதாக சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் அதை சொல்லவில்லை என கேட்கலாம். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். ஆனால், ஒரு சிலர் அப்படி ஆசைப்படுகின்றனர். அது ஒரு வகையான மன நோய்.
ராஜிவ் படுகொலைக்கு பின் நடந்த தேர்தலில், மிகப் பெரிய தோல்வியை தி.மு.க., சந்தித்தது. ஆனால், சாம்பலிலிருந்து மீண்டு வரும் பீனீக்ஸ் பறவையாய் எழுந்தது. தி.மு.க., கருணாநிதியின் பிள்ளை என்பதை விட அவரது கருத்தியலை உள்வாங்கியதால் தான், '10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், புதியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்' என்று உறுதியாக நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கருணாநிதி, எங்கள் கூட்டணிக்கு வைத்த பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. அதனால் தான், இன்றைக்கும் நாங்கள் தி.மு.க., பின்னால் நிற்கிறோம். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் எதுவானாலும் மதசார்பின்மையை உயர்த்தி பிடிப்போம்.
தமிழகத்தில் பா.ஜ., என்ற ஒரு கட்சியே கிடையாது. ஆனாலும், அக்கட்சியை துாக்கிப் பிடிக்க இங்கே ஒரு கோஷ்டி இருக்கிறது. வரும் தேர்தலில் அவர்களையும் விரட்டி அடிப்போம்.
தேர்தலில் அதிக 'சீட்' கேட்பீர்களா? என்று கேள்வி எழுப்பினால், ஆம், கேட்போம். ஒரே கருத்துடையவர்களிடையே உரசல் இருக்கலாம்; உடைந்து விடக்கூடாது.
எங்களுக்கு ஆறு போதாது; 10, 15 வேண்டும் என்போம். இதற்காக கூட்டணிக்குள் சிக்கல் எல்லாம் வராது.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
திருமாவளவனின் இந்தப் பேச்சு, தி.மு.க.,வில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.