'தலைமை' இன்றி தவிக்கும் 6 ஆயிரம் அரசு பள்ளிகள்; தடுமாறுது கல்வித்துறை
'தலைமை' இன்றி தவிக்கும் 6 ஆயிரம் அரசு பள்ளிகள்; தடுமாறுது கல்வித்துறை
ADDED : செப் 08, 2025 05:38 AM

மதுரை : தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பிரச்னைக்கு சட்டரீதியாக தீர்வு காண முடியாமல் மூன்று ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்க முடியாமலும் கல்வித்துறை தடுமாறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு டி.இ.டி., தேவை என்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது முதல் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளில் இறுதியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் டி.இ.டி., கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்கள் தவிர தற்போது பணியில் உள்ள 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் இந்த உத்தரவு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏற்கனவே இவ்வழக்குகள் தொடர்பாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் தற்போதைய நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் போன்றவை இத்துறையை தடுமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 5 டி.இ.டி., தேர்வுகளே நடத்தப்பட்டுள்ளன. தற்போதய உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின் பணியில் உள்ளவர்களும் டி.இ.டி., கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் சிறப்பு டி.இ.டி., நடத்தி தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஆலோசித்து வருகிறது. அதேநேரம் ஏற்கனவே 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்வர்களுக்கு அரசு என்ன பதில் அளிக்கும்.
மத்திய அரசு டி.இ.டி., கொண்டு வந்தபோது ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கும் வரை தற்காலிக ஆசிரியர்களை 2015 முதல் நியமித்துக்கொள்வது என அறிவித்து ரெகுலர் நியமனங்கள் தள்ளிப்போடப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். ஆனால் இதுவரை பெயரளவில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 13 ஆண்டுகளில் 20 ஆயிரம் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வாய்ப்பிருந்தும், அதிகாரிகளின் அறிவுரையால் தற்காலிகமாக இத்துறை நியமனங்களில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு தீர்வுகாண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார். அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.