8 மாதங்களில் 7 புலிகள் பலி; சுருக்கு கம்பி வேட்டையை தடுப்பது அவசியம்
8 மாதங்களில் 7 புலிகள் பலி; சுருக்கு கம்பி வேட்டையை தடுப்பது அவசியம்
UPDATED : டிச 06, 2024 05:11 AM
ADDED : டிச 06, 2024 12:36 AM

தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களில் ஏழு புலிகள் இறந்துள்ளன. இதற்கு காரணமான சுருக்குக் கம்பி வேட்டையை தடுக்க வழி தெரியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, மேகமலை ஆகிய புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை, 2018ல் 264 ஆக இருந்தது; 2022ல் 306 ஆக உயர்ந்துள்ளது. புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது நல்ல விஷயம் தான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக புலிகளின் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில், 40 நாட்களில் 10 புலிகள் இறந்தன.
அறிக்கை
இதுகுறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சிறப்பு குழு அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நடப்பு ஆண்டும் புலிகளின் இறப்பு அதிகரித்துஉள்ளது. கடந்த ஏப்., முதல் நவ., வரையிலான எட்டு மாதங்களில் ஏழு புலிகள் இறந்துள்ளதாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமான என்.டி.சி.ஏ., தெரிவித்து உள்ளது. இதில், நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து மூன்று புலிகள் இறந்துஉள்ளதாக என்.டி.சி.ஏ., தெரிவித்துள்ளது.
இயற்கை மரணம் மற்றும் விபத்து காரணமாகவே இப்புலிகள் இறந்ததாக, தமிழக வனத்துறை சார்பில் என்.டி.சி.ஏ.,வுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சுருக்குக் கம்பியில் சிக்கி புலிகள் இறந்துள்ளதாக தெரிகிறது. சுருக்குக் கம்பி வேட்டை நடந்துள்ளதை, வனத்துறை அதிகாரிகள் பதிவு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இறந்த புலிகளின் உடலில் சுருக்குக் கம்பியால் ஏற்பட்ட காயம் இருப்பது, பிரேத பரிசோதனையில் தெரியவந்தாலும் கூட, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதில்லை.
மறைப்பது ஏன்?
இதுகுறித்து, யானைகள் பாதுகாப்புக்கான, 'எலபஸ் மாக்ஸிமஸ் இண்டிகஸ்' அறக்கட்டளை நிர்வாகி தீபக் நம்பியார் கூறியதாவது: நடப்பு ஆண்டில் இதுவரை 11 புலிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய தகவல்களில், ஏழு புலிகள் மட்டுமே இறந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான சம்பவங்களில், சுருக்குக் கம்பியால் ஏற்பட்ட காயங்கள் புலிகள் உடலில் இருந்தது உறுதியாகி உள்ளது. ஆனால், அதன் அடிப்படையில் வழக்கு பதிவது இல்லை.
பொதுவாக, ஊரகப் பகுதிகள், வனப்பகுதிகளில் முயல், காட்டுப் பன்றியை பிடிக்க, சுருக்குக் கம்பிகளை உள்ளூர் மக்கள் பயன்படுத்துகின்றனர். புலிகள் போன்ற உயிரினங்கள் உள்ள பகுதிகளில் இதுபோன்ற சுருக்குக் கம்பிகள் பயன்பாட்டை, வனத்துறை தடுக்க வேண்டும்.
ஆனால், இதை தடை செய்வதற்கும், பயன்படுத்துவோரை தண்டிப்பதற்கும் போதிய சட்ட வழிமுறைகள் இல்லாததால், புலிகள் வேட்டைக்கு இதை பயன்படுத்தும் நிலை உள்ளது. வேட்டை தடுப்பு காவலர்களால் கூட, சுருக்குக் கம்பிகள் பயன்பாட்டை தடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த விஷயத்தில் வனத்துறை உரிய கவனம் செலுத்தி, விதிகளை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் புலிகள் இறப்பை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நடைமுறை சிக்கல்
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில இடங்களில் சுருக்குக் கம்பியில் சிக்கி, விலங்குகள் இறப்பது விசாரணையில் தெரியவருகிறது. அதன் அடிப்படையில், சுருக்குக் கம்பி போட்டது யார் என்பதை கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தாலும், அவர் முயலுக்காகத்தான் வைத்தேன் என்று கூறி ஜாமினில் வெளியில் வந்து விடுவர். இதைத் தடுக்க, சட்ட வழிமுறைகளை கடுமை யாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
![]() |