78,000 தில்லுமுல்லு வர்த்தக கட்டடங்களுக்கு வரி உயர்வு! அழுத்தத்தால் தப்பிய 2.32 லட்சம் குடியிருப்புகள்
78,000 தில்லுமுல்லு வர்த்தக கட்டடங்களுக்கு வரி உயர்வு! அழுத்தத்தால் தப்பிய 2.32 லட்சம் குடியிருப்புகள்
UPDATED : அக் 03, 2024 03:22 AM
ADDED : அக் 02, 2024 11:59 PM

சென்னையில், பரப்பளவை குறைத்து காட்டி தில்லுமுல்லு செய்து வந்த 78,000 வணிக கட்டடங்களை மறுமதிப்பீடு செய்து, கூடுதல் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 3.10 லட்சம் கட்டடங்கள் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு உள்ள நிலையில், பல்வேறு அழுத்தங்களால், 2.32 லட்சம் குடியிருப்பு கட்டடங்களுக்கு கூடுதல் வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாயில், சொத்து வரி பிரதானமாக உள்ளது. ஆண்டுக்கு, 1,800 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. நிலுவை வரி போன்றவை வசூலிக்கப்பட்டால், ஆண்டுக்கு, 2,300 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். இந்த வரி வருவாயில் இருந்து, சாலைகள் சீரமைப்பு, கொசு மருந்து அடித்தல், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை கணக்கீடு செய்ய, புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது. 'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டடங்களின் பரப்பளவு கணக்கிடப்பட்டது.
இதில், 3,10,139 கட்டடங்களின் சொத்து வரியில் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் கட்டட பரப்பளவை குறைத்து காட்டி, சொத்து வரியை குறைவாக செலுத்துவதும் கண்டறியப்பட்டது. அந்த கட்டடங்களின் பரப்பை மறு மதிப்பீடு செய்து, முறையான சொத்து வரியை வசூலிக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
ஏற்கனவே மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் வாயிலாக, 30,899 கட்டடங்கள் மறு அளவீடு செய்யப்பட்டன. மீதமுள்ள, 2,79,240 கட்டடங்களை மறு அளவீடு செய்ய, பிரைம் மெரிடீயன் சர்வேஸ் நிறுவனம், அருள் நம்பி இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ், அரசு அசோசைட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், 2023ல் ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்நிறுவனங்களுக்கு, மண்டலம் வாரியாக மறு அளவீடு செய்ய வேண்டிய கட்டடங்கள் பிரித்து ஒதுக்கப்பட்டன. இந்த பணிகளுக்காக அந்நிறுவனங்களுக்கு, ஐந்து கோடி ரூபாயை மாநகராட்சி வழங்கியது. மறு மதிப்பீட்டின் வாயிலாக மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
பணிகள் பெருமளவு முடிந்த நிலையில், தற்போது, 20,932 கட்டடங்களை மட்டுமே, மறு அளவீடு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், 'மறு மதிப்பீட்டின்படி, வணிக கட்டடங்களுக்கு மட்டுமே சொத்து வரியை உயர்த்திக் கொள்ளலாம். குடியிருப்பு கட்டடங்களுக்கு வேண்டாம்' என, மாநகராட்சி சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது.
இந்த திடீர் உத்தரவால், மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்படுவதுடன், மறுமதிப்பீட்டிற்கு செலவிட்ட தொகையும் வீணாகி உள்ளது.
மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: சொத்து வரியில் மாறுபாடு இருந்த கட்டடங்களை அளவிடும் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் மறு அளவீட்டின்படி, சொத்து வரி நிர்ணயம் செய்யப்படும். தற்போது, 78,000 வணிக கட்டடங்களுக்கு மட்டுமே சொத்து வரி உயர்த்தப்படும்.
மீதமுள்ளவை குடியிருப்பு கட்டடங்களாக இருப்பதால், அங்கு மறுமதிப்பீட்டின்படி சொத்து வரி உயர்த்த வேண்டாம் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, மறுமதிப்பீட்டில் இனி, வணிக கட்டடங்களுக்கு மட்டுமே சொத்து வரி உயர்த்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -