சபலிஸ்ட்'டிடம் 80 சவரன் பறிப்பு: 'பேஸ்புக்' கொள்ளைக்காரி சிக்கினார்!
சபலிஸ்ட்'டிடம் 80 சவரன் பறிப்பு: 'பேஸ்புக்' கொள்ளைக்காரி சிக்கினார்!
ADDED : மார் 07, 2025 08:24 AM

விருதுநகர்: 'பேஸ்புக்'கில் நட்பாக பழகி, அரைகுறை ஆடைகளுடன் தோன்றி, சபலிஸ்டுகளையும் அதே கோலத்தில் வீடியோ எடுத்து மிரட்டி, பணம், நகை பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த 60 வயது நபர்; வளைகுடா நாட்டில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். மாடலிங் செய்து வருவதாகவும், கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும் கூறி, பண உதவி கேட்டுள்ளார். இவர் முதலில், 5,000 ரூபாய் அனுப்பியுள்ளார். பின், அவ்வப்போது கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.
ஒருநாள் வீடியோ சாட்டில் அரைகுறை ஆடையுடன் தோன்றிய அப்பெண், அவரையும் ஆடைகளை களைய சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சபலத்தில் இவர் ஆடைகளை களைய, அதை அப்பெண் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
பின், அந்த வீடியோவை இவரின் மனைவிக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி, அவரிடம் இருந்து 80 சவரன் தங்க நகைகளை கூரியர் வாயிலாகவும், பணத்தை வங்கி கணக்கு வாயிலாகவும் பெற்றுள்ளார். தொடர்ந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனால், 60 வயது நபர் விருதுநகர் எஸ்.பி., கண்ணனிடம் நேரடியாக புகார் அளித்தார். அவர் பரிந்துரையில், 'சைபர் கிரைம்' ஏ.டி.எஸ்.பி., அசோகன், இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார், மோசடி பேர்வழியான அப்பெண்ணை கும்பகோணத்தில் கைது செய்து, நேற்று முன்தினம் சாத்துார் அழைத்து வந்தனர்.
விசாரணையில், அப்பெண் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில், 'நந்துமா' என்ற பெயரில் கணக்கு வைத்திருப்பதும், மாடலிங்கில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. இதுபோன்று பலரிடம் பழகி, அவர்களை மிரட்டி பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, பாளையங்குடி அருகே எழவரசநல்லுாரைச் சேர்ந்த 29 வயதான அந்த மோசடி பெண்ணை கைது செய்த போலீசார், அவரது வங்கி கணக்கில் இருந்த, 61.93 லட்சம் ரூபாயை முடக்கி, விசாரித்து வருகின்றனர்.