ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனைகள்!
ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனைகள்!
UPDATED : டிச 16, 2025 11:42 AM
ADDED : டிச 16, 2025 04:36 AM

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளையில் நாளை மறுதினம் நடக்கும் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட போலீசார், 84 நிபந்தனைகள் விதித்துள்ளனர். இது குறித்த பட்டியல், பெருந்துறை பகுதி கட்சி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள்
* பிரசார வேனை சுற்றி நான்கு புறமும் மக்களுக்கும், வேனுக்கும் இடையே, 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
* மக்கள் உள்ளே, வெளியே வந்து செல்வது குறித்த வரைபடம்.
* பொதுமக்கள் வந்து செல்லும் போது தள்ளுமுள்ளு இல்லாத வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
* மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் வர அனுமதிக்க கூடாது.
* மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனை மருத்துவக்குழு, எத்தனை ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் என்ற விபரத்தை அளிக்க வேண்டும்.
* 'சிசிடிவி' கேமரா, எல்.இ.டி., திரைகளின் எண்ணிக்கை விபரம் வழங்க வேண்டும்.
* அவசர காலத்தில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தனி வழி விட வேண்டும்.
* மின் கம்பங்கள், மரங்கள், உயரமான கட்டடங்கள், விளம்பர போர்டுகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* இது போன்ற 84 நிபந்தனைகள் போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளதாக, பெருந்துறை பகுதி த.வெ.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆட்சியில் விஜய் அமருவதை தடுக்க முடியாது
என்னை அரவணைத்து, சகோதரராக ஏற்றுக் கொண்ட த.வெ.க., தலைவர் விஜய்க்கு கோடான கோடி நன்றி. என்னை, 'இமயமே விழுந்தாலும் சறுக்காமல் இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் செங்கோட்டையன்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார். தமிழகத்தில், எதிர்காலத்தில் துாய்மையான தலைமை உருவாக வேண்டும்.
இரண்டு இயக்கங்களை துாக்கி எறிந்துவிட்டு, புதிய இயக்கத்தை கொண்டு வருவோம். விஜயை ஆட்சி பீடத்தில் அமர வைப்பதே என் லட்சியம். எந்த சக்தியாலும் விஜய் ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியாது; 234 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறித்து, விஜயிடம் ஒப்படைப்போம். - செங்கோட்டையன், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,

