பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
UPDATED : டிச 16, 2025 10:53 AM
ADDED : டிச 16, 2025 04:06 AM

நமது டில்லி நிருபர்
டில்லியில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அக்கட்சி நிர்வாகி பேசியதற்கு, பார்லிமென்டில், ஆளும் பா.ஜ., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 'காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர்.
வார விடுமுறைக்கு பின், லோக்சபா நேற்று காலை கூடியதும், பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு பேசியதாவது: நாம் அரசியலில் தான் எதிரானவர்களே தவிர, ஒருவருக்கொருவர் எதிரிகள் இல்லை. 2014 தேர்தலில் தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி, பா.ஜ., - எம்.பி., ஒருவரை பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட எம்.பி., தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், ஞாயிறன்று நடந்த காங்., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி ஒருவர், 'பிரதமர் மோடி விரைவில் கல்லறைக்கு செல்லப் போகிறார்' என மிகவும் இழிவாக பேசி உள்ளார். அப்போது, மேடையில் காங்., மேலிடத் தலைவர்கள் அனைவருமே இருந்தனர். இது கண்டனத்திற்குரியது.உலகம் முழுதும் போற்றப்படும் பலம் வாய்ந்த தலைவர் மோடி; இந்நாட்டு மக்களின் தலைவர். அவரை இவ்வளவு இழிவாக பேசியதற்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், காங்., தலைமையும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, 'மன்னிப்பு கேள்... மன்னிப்பு கேள்' என பா.ஜ., - எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். பதிலுக்கு, 'டிராமா பண்ணாதே... டில்லி காற்று மாசு பிரச்னையை திசை திருப்பாதே' என காங்., எம்.பி.,க்களும் முழக்கமிட்டனர். சபையில் கூச்சல், குழப்பம் அதிகரித்ததால், வேறு வழியின்றி கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. ராஜ்யசபாவிலும் இந்த விவகாரம் வெடித்தது. சபை முன்னவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான நட்டா, ''பிரதமர் மோடி குறித்து காங்., நிர்வாகி பேசியது, அக்கட்சியின் மனநிலையை காட்டுகிறது.
பிரதமரின் உயிருக்கே மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது கண்டனத்திற்குரியது. இதற்கு, சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார். அவரோடு சேர்ந்து பா.ஜ., - எம்.பி.,க்களும் முழக்கமிடவே, நிலைமை மோசமானது. ஆளுங்கட்சி எம்.பி.,க்களே அமளியில் இறங்கியதால், அலுவல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, ஜீரோ நேரம் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

