2ம் வகுப்பு பாடத்தை கூட வாசிக்க தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்!: தமிழகத்தில் ஆரம்ப கல்வியின் தரம் குறித்த பகீர் தகவல்
2ம் வகுப்பு பாடத்தை கூட வாசிக்க தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்!: தமிழகத்தில் ஆரம்ப கல்வியின் தரம் குறித்த பகீர் தகவல்
ADDED : ஜன 31, 2025 12:50 AM

தமிழக கிராமங்களில், எட்டாம்ம் வகுப்பு மாணவர்களில், 64 சதவீதம் பேரும், ஐந்தாம் வகுப்பு படிக்கும், 35 சதவீதம் பேரும், இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பிரதம் அறக்கட்டளை' என்ற அமைப்பு நடத்திய, நாட்டின் கல்வி நிலை குறித்த, 'ஏசெர்' அறிக்கை, நேற்று முன்தினம் டில்லியில் வெளியிடப்பட்டது.
அதில், மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக, கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் மட்டும், 30 மாவட்டங்களைச் சேர்ந்த, 876 கிராமங்களில், மூன்று முதல், 16 வயது வரையுள்ள, 28,984 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுஉள்ளது.
அதில், தமிழகத்தின் தற்போதைய துவக்கக்கல்வி நிலை, உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மாநிலங்களை விட சரிந்தும், கர்நாடகா, தெலுங்கானாவை விட உயர்ந்தும் உள்ளது.
'ஸ்மார்ட் போன்'
கொரோனா தொற்று பரவலின் போது, 'ஸ்மார்ட் போன்' வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டது. அதன் வாயிலாக, 14 முதல், 16 வயதுடையோரில், 90 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரிந்தவர்களாக உள்ளனர்.
தேசிய அளவிலும், இதே சதவீதம் தான் உள்ளது. அத்துடன், 'ஆன்லைன்' பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்தவர்களாகவும் மாணவர்கள் உள்ளனர்.
மற்றவர்களை விட, சமூக ஊடக கணக்குகளை முடக்குவது, ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது குறித்த புரிதலும் உள்ளது. அதேநேரம், ஸ்மார்ட் போனை கல்விக்காக பயன்படுத்துவதில், மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 5- முதல், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கே சென்று இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதில், முதல் வகுப்பு மாணவர்களில், 43.4 சதவீதம்; இரண்டாம் வகுப்பு மாணவர்களில், 16.9 சதவீதம்; மூன்றாம் வகுப்பு மாணவர்களில், 8.6 சதவீதம் பேருக்கு, ஒரு எழுத்தை கூட வாசிக்க தெரியவில்லை.
வாசிப்பு திறன்
மேலும், மூன்றாம் வகுப்பில், 24.8 சதவீதம்; நான்காம் வகுப்பில், 30 சதவீதம்; ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், 34 சதவீதம் பேரால், முதல் வகுப்பு பாடப்புத்தகத்தை கூட வாசிக்க தெரியவில்லை.
அதேபோல, ஐந்தாம் வகுப்பில், 35 சதவீதம்; 6ம் வகுப்பில் 45; ஏழாம் வகுப்பில் 56; எட்டாம் வகுப்பில் 64 சதவீதம் மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை கூட வாசிக்க தெரியவில்லை.
அத்துடன், 2018ம் ஆண்டு 2.3; 2022ல், 1.9; 2024ல் 1.8 சதவீதம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கல்வியில் பின் தங்கியவர்கள் சதவீத விபரம்:
* 2ம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வாசிக்க தெரியாத, 5ம் வகுப்பு மாணவர்கள், 35 சதவீதம்
* எழுத்துக்களை அறியாத, 3ம் வகுப்பு மாணவர்கள், 8.6 சதவீதம்
* எழுத்து தெரிந்தும் சேர்த்து படிக்க தெரியாத மாணவர்கள், 18.2 சதவீதம்
* அர்த்தம் புரியாமல் படிப்போர், 36.3 சதவீதம்
* முதல் வகுப்பில் 32; இரண்டாம் வகுப்பில் 10.5; மூன்றாம் வகுப்பில் 5.9 சதவீதம் பேருக்கு எண்கள் தெரியவில்லை
வாசிக்க தெரிந்த மாணவர்கள் சதவீதம்
* 2ம் வகுப்பு பாடத்தை படிக்க முடிந்த 3ம் வகுப்பு மாணவர்கள்
2018/2022/2024
11.6/4.7/13.2
------------
* 2ம் வகுப்பு பாடத்தை படிக்கத் தெரிந்த 5ம் வகுப்பு மாணவர்கள்
2018/2022/2024
46.3/26.0/37.0
-----------
வாசிப்பு திறன் நிலவரம்
வகுப்பு/எழுத்து தெரியாதவர்கள்/ தெரிந்தவர்கள்/ வார்த்தைகளை படிக்க தெரியாதவர்கள் /ஒன்றாம் வகுப்பு பாடத்தை வாசிக்க தெரியாதவர்கள் / 2ம் வகுப்பு பாடத்தை வாசிக்க தெரியாதவர்கள்/
1/43.4/38.2/15.02/.2/1.2/
2/16.9/32.4/36.0/24.8/12.0
3/8.6/18.2/36.3/24.8/12.0/
4/3.4/10.2/31.2/330.7/24.5
5/2.9/6.0/20.6/34.8/35.0/
6/1.7/4.4/16.5/32.1/45.3/
7/1.6/2.7/11.8/27.8/56.1/
8/0.4/1.9/9.5/24.0/64.2/
***
- நமது நிருபர் --