தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை

12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை

12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை


ADDED : அக் 22, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு தசரா விழாவில் ஆச்சரியப்படுத்திய மயில் நடனம்


ஆண்டுதோறும் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா, இந்தாண்டும் வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி 3,473 'ட்ரோன்'களை கொண்டு உருவான மயில் நடனம், பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்தது. பாரம்பரியம், தொழில்நுட்பம், படைப்பாற்றல் ஆகியவற்றின் கலவையாக இருந்த அந்த மயில் நடனத்தின் வீடியோ, இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அதிக ட்ரோன்களை பயன்படுத்தி, ஒரு பறவை வடிவத்தை உருவாக்கியதற்கான கின்னஸ் சாதனையும் இதன் மூலம் படைக்கப்பட்டுள்ளது.

Image 1634237

புதுப்பொலிவு பெற்ற ரிஷிகேஷ்; ஆனந்த் மஹிந்திரா நம்பிக்கை


மஹிந்திரா நிறுவன தலைவரான ஆனந்த், சிறு வயதில் சினிமா எடுத்த காலத்தில் ரிஷிகேஷ் நகருக்கு அடிக்கடி சென்று வந்தவர். சமீப காலத்தில் அங்கு அவர் செல்லவில்லை. முன்பு இருந்ததை காட்டிலும், இப்போது நகரம் நல்ல மேம்பாடு அடைந்துள்ளது. சமீபத்திய படங்களை பார்த்து விட்டு, தன் பழைய நினைவுகளில் ஆனந்த் மூழ்கிய பதிவு, வலைதளங்களில் பரவியுள்ளது.

'கங்கை நதியும் சுற்றியுள்ள மலைகளும் தான் ரிஷிகேஷின் அடையாளம். இப்போதைய மேம்பாட்டுப்பணிகள் வரவேற்கத்தக்கவை. எப்போதும் இயற்கையே தன்னை அலங்கரித்த நகரத்துக்கு, இது ஒரு வரவேற்கத்தக்க புதுப்பொலிவு. இந்த மாற்றங்களுக்கு மத்தியிலும் ரிஷிகேஷ் நகரத்தின் ஆன்மா, தன்னை தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்' என்கிறார், ஆனந்த்.

Image 1634238

12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை


சீனாவின் புஜியன் மாகாணம் ஜாங்பிங் நகரில், அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து ஒரு குழந்தை, கிரில் கம்பியில் சிக்கி தொங்கிய வீடியோ, வலைதளங்களில் வேகமாக பரவியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னலை தாண்டிய அந்த குழந்தையின் தலை, கிரில்களுக்குள் சிக்கி விட்டது. தலையும், கைகளும் உள்ளே இருக்க, உடல் முழுவதும் வெளியில் தொங்கிக் கொண்டு இருந்தது.

இதைக்கண்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடிச்சென்றனர். குழந்தை விழுந்து விடாமல் இருப்பதற்காக, கீழே இருந்து ஒரு ஸ்டூலில் முட்டுக் கொடுத்தபடி இருவர் பிடித்திருந்தனர். மீட்பு படையினர் வீட்டுக்குள் நுழைந்து ஜன்னல் வழியாக குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தை, அந்தரத்தில் தொங்கிய அந்த திக்...திக்... வினாடிகள், காண்போரை பீதியில் ஆழ்த்தின.

தைவானில் விசித்திர உணவகம்; இந்திய பெண்ணுக்கு அதிர்ச்சி


தைவானுக்கு சுற்றுலா சென்ற இந்திய பெண் ஆகான்ஷா மோங்கா, குளியலறை தோற்றத்துக்கு மாற்றப்பட்ட 'மாடர்ன் டாய்லெட்' உணவகத்துக்கு சென்றார். அங்கு, இருக்கைகள் முதல் உணவு பரிமாறும் கிண்ணங்கள் வரை எல்லாமே, கழிப்பறை பயன்பாட்டு பொருட்கள் வடிவத்தில் இருந்தன. வாடிக்கையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் வகையில் உணவகத்தை இப்படி மாற்றி வைத்திருந்தனர்.

Image 1634239

இன்னும் முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் ஒன்றுண்டு என்கிறார், ஆகான்ஷா. அவர்கள் பரிமாறும் சாக்லேட் கேக், அசப்பில் அப்படியே மனிதக்கழிவு போலவே இருந்ததாகவும், 'இனிமேல் என்னால் டார்க் சாக்லேட் கேக்கை முன்பு சாப்பிட்டது போல சாப்பிட முடியாது' என்றும் கூறுகிறார். அவரது வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.

தேர்தலில் கை கொடுத்தது நையாண்டி பிரசாரம்


கனடாவின் கெலோனா நகராட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட பிராடி ரோஜர்ஸ், 33, தன்னை தாழ்த்திக்கொண்டு கேலி, கிண்டல் நையாண்டி பிரசாரம் மேற்கொண்டார். 'இதைச்செய்ய எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. இது எவ்வளவு கடினமாக இருந்து விடப்போகிறது. சரி, நான் செய்கிறேன்' என்ற முழக்கங்களுடன் பிரசாரம் செய்தார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 12,600 ஓட்டுகளை பெற்று அவர் வெற்றியும் பெற்று விட்டார்.

Image 1634240

'மக்கள் என் பிரசாரத்தில் கிண்டலான நகைச்சுவையை பார்த்தனர் என்று நினைக்கிறேன். என்னிடம் நுட்பமான யோசனைகள் இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம்' என்கிறார் ரோஜர்ஸ். நையாண்டி பிரசாரம் செய்தே, தேர்தலில் வென்ற அவர் பற்றிய செய்தி, வலைதளங்களில் பரவி வருகிறது.

வேதனையில் முடிந்தது முதல் நாள் முதல் பயணம்


புது கார் டெலிவரி வாங்கச் செல்வோர், நன்றாக ஓட்டத் தெரிந்த ஒருவரையும் கூடவே அழைத்துச் செல்வது நல்லது என்பதை சொல்லும் வகையில் ஒரு சம்பவம், கர்நாடகாவில் நடந்திருக்கிறது. சாகர் நகர ஷோரூமில் புது மாருதி கார் வாங்கியது அந்த குடும்பம். டெலிவரி பெற்றுக்கொண்ட உரிமையாளர், தானே ஷோரூமில் இருந்து காரை ஓட்டிச்சென்றார். காரை கிளப்பியதும், ஆக்சிலரேட்டரை நன்றாக மிதித்து விட்டார் போலிருக்கிறது.

Image 1634241

கார், ஷோரூம் வாசலை கடந்து, பிரதான சாலையில் சென்ற பைக் மீது மோதிய பிறகு தான் நின்றது. இதில், பைக்கில் வந்தவரும், பில்லியனில் இருந்தவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின் வீடியோ காட்சி, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us