'வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சியே அமையும்'
'வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சியே அமையும்'
ADDED : டிச 20, 2024 05:22 AM

வரும் சட்டசபை தேர்தலுக்கு தமிழகத்தில் ஐந்து முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
அவர் அளித்த பேட்டி: சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய். அவர் சினிமாவை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது. அரசியலில் ஏற்ற, இறக்கங்களை அவர் சந்திப்பார்; துரோகிகளையும் தொடர்ச்சியாக சந்திப்பார். அதையெல்லாம் தாண்டி, விஜய் அரசியலில் நீடிக்க வேண்டும்.
இயலாத காரியம்
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவைப் போல், நடிகர் விஜய் நீண்ட காலத்துக்கு அரசியல் பயணம் மேற்கொண்டால் நல்லது தான். அவர் நினைப்பது போல, தமிழகத்தின் அரசியல் சிஸ்டத்தை ஒரு தேர்தல் வாயிலாக மாற்றி விட முடியும் என்பது இயலாத காரியம். அதை நான் நம்பவில்லை.
தமிழகத்தில் தற்போதைய நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர், த.வெ.க., என ஐந்து முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐந்து கட்சிகளும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்கின்றன.
நாங்கள் தான் சரியான அரசியலை முன்னெடுத்து செல்கிறோம் என தி.மு.க., சொல்கிறது. தி.மு.க., ஆட்சியில் இருந்து செய்யும் தவறுகளை, நாங்கள் ஆட்சிக்கு வந்து சரி செய்வோம் என்று அ.தி.மு.க.,வினர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் புதுவிதமான அரசியலை கொண்டு வந்து மக்களை பாதுகாப்போம் என பா.ஜ., தரப்பில் சொல்கிறோம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; தமிழக அரசியலை சுத்தமாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சீமான் சொல்கிறார்.
தமிழகத்தின் மொத்த அரசியல் சிஸ்டத்தையும் மாற்றிக் காட்டுகிறோம் என விஜய் கட்சி சொல்கிறது. ஆனால், தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று திரள வேண்டும் என, பா.ஜ., துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசைப்படுகிறார்.
கட்டாயம் நிறைவேறும்
ஆனால், வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், மக்கள் தெளிவாக ஓட்டளிக்க உள்ளனர். அதனால், தமிழகத்தில் தனித்த ஆட்சி என யாரும் கனவு காண வேண்டாம். எந்தக் கட்சி பிரதான கட்சியாக இருந்து ஆட்சியமைத்தாலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் முழுதும் மாறி உள்ளது.
இந்த சூழலில், தேசிய அளவில் சிறப்பான ஆட்சியையும், பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் மெச்சும் ஆட்சியையும் கொடுத்து வரும் பா.ஜ., தமிழகத்திலும் 2026ல் தன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது என் எதிர்பார்ப்பு; ஆசை. கட்டாயம் நிறைவேறும்.
தமிழக பா.ஜ.,வை பொறுத்தவரை, வரும் சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,வுடனோ, த.வெ.க.,வுடனோ கூட்டணி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -