பணம் வாங்கி கொண்டு பதவி; விஜய் கட்சியில் கிளம்பும் பூதம்
பணம் வாங்கி கொண்டு பதவி; விஜய் கட்சியில் கிளம்பும் பூதம்
ADDED : மே 01, 2025 04:41 AM

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தில், கோவை கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகி ஒருவர், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, மாவட்ட பொறுப்பு கொடுத்திருப்பதாக, கலகக்குரல் கிளம்பியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின், கொங்கு மண்டல ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், கோவையில் சமீபத்தில் நடந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, கட்சியினரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் இருக்காது. ஊழல் செய்ய விடவும் மாட்டோம்' என முழங்கினார். கோவை மாவட்டத்தில் கட்சி ரீதியாக கோவை மாநகர், தெற்கு, கிழக்கு, புறநகர் கிழக்கு, புறநகர் வடக்கு ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில், கிழக்கு மாவட்டத்தில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்காமல், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாக, தலைமைக்கு புகார்கள் சென்றிருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறியதாவது: கட்சிக்காக வேலை செய்வோருக்கு பதவி வழங்க, தலைமை அறிவுறுத்தல் வழங்கியது. ஆனால், கோவை கிழக்கு மாவட்டத்தில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்கவில்லை. கட்சி மாறி வந்தவர்கள் சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகி ஒருவர், தன்னிச்சையாக செயல்பட்டு இந்தக் காரியத்தை செய்திருக்கிறார். அதற்காக பணம் பெற்று இருப்பதாக சொல்கின்றனர்.
கட்சியில் சேர்ந்து இரண்டு மாதமே ஆன ஒரு பெண்ணுக்கு, மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தெற்கு தொகுதியைச் சேர்ந்த சிலருக்கு, கிழக்கு மாவட்டத்தில் பொறுப்பு வழங்கி உள்ளனர்.
இது தொடர்பாக, கட்சி தலைமைக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பினோம். விசாரணை குழு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். இதனால், கட்சியில் இருப்போர் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகம் முழுதும் இப்படி பல இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது. இதுகுறித்து, கட்சித் தலைவர் விஜய் தீவிரமாக விசாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விசாரித்தபின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.