sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தெரு நாய்களுக்காக ஒரு துளி கண்ணீர்

/

தெரு நாய்களுக்காக ஒரு துளி கண்ணீர்

தெரு நாய்களுக்காக ஒரு துளி கண்ணீர்

தெரு நாய்களுக்காக ஒரு துளி கண்ணீர்

50


ADDED : ஆக 12, 2025 07:29 AM

Google News

ADDED : ஆக 12, 2025 07:29 AM

50


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

இது ஒரு குறள். சுருக்கமாக விளக்கம் என்ன என்றால், பிரச்னையின் மூலம் என்ன என்பதை கண்டறிந்து அதை சரி செய்வது தான் அறிவுடமை என்கிறார் வள்ளுவர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்டிவாலா, மகாதேவன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவை படித்ததும் மனதில் தோன்றிய குறள் இது. தெரு நாய்களை ஒன்று விடாமல் பிடித்து பட்டியில் அடைக்குமாறு டில்லி அரசுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

எக்காரணம் கொண்டும் அந்த நாய்களை திறந்து விட கூடாது; அப்படி விடுமாறு நாய்களுக்காக யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் மீது வழக்கு போடுங்கள் என்று கடுமையாக உத்தரவு போட்டுள்ளனர் நீதிபதிகள்.

இந்தளவு கோபத்துக்கு என்ன காரணம் என்று புரியவில்லை.

நாய்கள் மனிதனின் மிகச்சிறந்த நண்பர்கள். அசாத்தியமான நன்றி உணர்வு கொண்டவர்கள். அன்புக்கு அடிமைகள். வாழ்க்கையே வெறுத்து விரக்தியின் விளிம்புக்கு போன எத்தனையோ பேர், முன்பின் தெரியாத ஒரு நாயின் தொடர்பால் முற்றிலும் மாறி, சாதனையாளர்களாக மாறிய உண்மைக் கதைகள் ஏராளம்.

பலர் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை. ஆனால், ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்துக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும். அதில் காரணம் இருக்கும். துரதிர்ஷ்டம் என்ன என்றால், எவருமே அதை சொல்வதும் இல்லை, ஆராய்வதும் கிடையாது.

நாய் மட்டுமல்ல. எந்த விலங்கும் காரணமின்றி மனிதனை தாக்குவது இல்லை. இது ஆராய்ச்சி அடிப்படையில் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்ட முடிவு. மற்ற விலங்குகள் எல்லாம் காட்டுக்குள் துரத்தப்பட்ட பிறகு, மனிதனுக்கு எஞ்சியிருக்கும் ஒரே தோழன் நாய்.

இந்தியா 140 கோடி மக்களை கொண்ட நாடு. தெரு நாய்களின் எண்ணிக்கை இதில் ஒரே ஒரு சதவீதம் என்கிறது அரசின் கணக்கு. தேவையின்றி சீண்டுவது, கல்லால் அடிப்பது, வாகனத்தால் பயமுறுத்துவது போன்ற தூண்டுதல் இருந்தால் தவிர, தெரு நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

டெரிட்டோரியல் அனிமல் அல்லது எல்லை வரைந்து அதற்குள் வாழும் விலங்கு என்று நாய்களுக்கு இயல்பு குறிப்பிட்டுள்ளனர். சிறுநீர் கழித்து அது வரைந்து வைத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் எவராவது வந்தால், தற்காப்பு உணர்வுடன் அது குரைத்தபடி துரத்துவது இந்த எல்லை உரிமையின் வெளிப்பாடு. எல்லை தாண்டிவிட்டால் எவரையும் அது பின் தொடர்வது இல்லை.

நாய்களை எப்படி அணுக வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக, நாய்களை கொடிய விலங்கு போல சித்தரித்து கதை சொல்லும் பழக்கம் பல பெற்றோருக்கு இருக்கிறது. எங்காவது ஒருவர் நாய்க்கடிக்கு ஆளானால், கடித்து குதறியது என்று பயமுறுத்தும் வகையில் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன ஊடகங்கள்.

இதனால், நேற்று வரை கவனத்தில் கூட வராமல் அதன் வேலையை பார்த்துக் கொண்டிருந்த நாய்கள், திடீரென இன்றைக்கு வில்லன்களாக தோற்றம் தருகின்றன. இது, பார்ப்பவர்களின் மனநிலையையும், அதன் விளைவாக நாய்களின் உணர்வுகளையும் பாதிக்கிறது.

தெரு நாய் என்பதே தவறான சித்தரிப்பு. வீடற்ற நாய்கள் என்பதே சரி. வீட்டுக்கொரு நாய் தத்தெடுத்து வளர்த்தால், வீடற்ற நாய்களே இருக்காது. அந்த நாய்கள் விருப்பப்பட்டு கருத்தரித்து குட்டிகளை பிரசவிப்பது இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் இயலாமை அல்லது அலட்சியம் காரணமாக இந்த எண்ணிக்கை பெருக்கம் நடக்கிறது.

தெரு நாய்கள் என்று கேவலமாக சொல்லப்படும் இந்த விலங்குகளால் தான், திருட்டு உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பது நிஜம். மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது இந்த பூமி என்கிற அறியாமையிலும் ஆணவத்திலும் பல விலங்குகளை நம்மிடம் இருந்து ஒதுக்கி விட்டோம். கடைசியாக, மனிதனின் சிறந்த நண்பன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெருமை பெற்ற நாய்களையும் ஒதுக்கி விட்டால், மனிதன் தனிமரம் ஆகி விடுவான்.

போதையில் கொலை செய்யும் மனிதர்கள், விபத்தால் சாகடிக்கும் டிரைவர்கள், வேண்டியவர்களையே விஷம் வைத்து கொல்லும் கொடூரர்கள், இன்னமும் அடையாளம் காண முடியாத ஆட்கொல்லி நோய்கள் ஆகியவற்றை காட்டிலும் ஆதரவு இல்லாத நாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது.

ஓட்டு போடும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றவே மூச்சுத் திணறும் உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பில் வாக்குரிமை இல்லாத தெரு நாய்களின் விதி ஒப்படைக்கப்பட்டால், அவற்றின் கதி என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நாய்கள் நமது நண்பர்கள். நன்றி உணர்வுக்கு பேர் போன அவர்களை விலக்கி வைத்து விரட்டி அடித்து அழித்தொழிப்பது விவேகம் இல்லாத செயல். நமது தவறுகளுக்காகவும் இயலாமைக்காகவும் நாய்களை தண்டிப்பது அநியாயம். சராசரி மனிதர்களை போல சுப்ரீம் கோர்ட் உணர்ச்சிவசப்பட்டு உத்தரவுகள் பிறப்பித்தால், பிரஜைகள் வேறு யாரிடம் முறையிட முடியும்? கடவுளை தவிர.

- பைரவி-






      Dinamalar
      Follow us