தீபாவளிக்கு ஒரு வாரம் விடுமுறை; கிளம்பியது விவாதம்
தீபாவளிக்கு ஒரு வாரம் விடுமுறை; கிளம்பியது விவாதம்
ADDED : நவ 10, 2026 05:31 AM

ரசிக்க வைத்த இசைப்பயணம்; மகிழ்வித்த கொல்கட்டா தம்பதி
மே.வங்கம் கொல்கட்டாவில் பட்டயக் கணக்காளராக பணியாற்றும் அபிஷேக் முகர்ஜி, கார் பயணத்தில் பாடிய பாடலின் வீடியோ, வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது மனைவி கார் ஓட்ட, அருகில் அமர்ந்து கொண்டு பாடுகிறார் அபிஷேக். பாலிகா வதுா படத்தின் 'படே அச்சே லக்தே ஹை' பாடலை உணர்வுப்பூர்வமாக அவர் பாடுவது, காண்பவர்களை ரசிக்க வைக்கிறது. பாடி முடிக்கும்போது, அவரது மனைவியும், பாடுவதில் இணைந்து கொள்கிறார்.
காரின் பின்னிருக்கையில் இருக்கும் அவர்களது மகன், அவ்வப்போது எட்டிப்பார்த்து வீடியோவில் சுவாரஸ்யம் செய்கிறான். தம்பதியின் இயல்பான பிணைப்பையும், மகனின் அழகிய எதிர்வினைகளையும் இணையவாசிகள் ரசித்தனர்.
ஒரு வாரம் விடுமுறை; கிளம்பியது விவாதம்
தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை, விளக்கேற்றி இனிப்பு பரிமாற மட்டுமே போதும்; 1,000- முதல் 2,000 கி.மீ., வரையிலான தொலைவில் வேலை செய்பவர்கள், ஊர் சென்று வருவது எப்படி என்று கேட்ட ஒருவர், 'இந்தியாவில் தீபாவளிக்கு ஒரு வார விடுமுறை தேவை' என்று பதிவிட்டார்.
'மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை போல, இந்தியாவிலும் தீபாவளிக்கு விடுமுறை இருக்க வேண்டும்' என்கிறார், அவர். இதை ஆதரித்து ஏராளமானோர் பதிவுகளை வெளியிட்டனர். வேறு சில நாடுகளிலும், பண்டிகைக்கு ஒரு வாரம் விடுமுறை விடுவதை பலர் சுட்டிக்காட்டினர். எதிர்ப்பவர்களும் இருக்கின்றனர்; விவாதம் தொடர்கிறது.
மொபைல் போன் டார்ச் ஒளியில் விமான பயணியரின் தீபாவளி
தீபாவளி நாளன்று விமானம் இயக்கிய பைலட் பிரதீப் கிருஷ்ணன், பயணியருடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் பண்டிகையைக் கொண்டாடி, அனைவருக்கும் மறக்க முடியாத தருணத்தை உருவாக்கினார். விமான பயணியரிடம் மைக்கில் பேசிய அவர், தீபாவளி கொண்டாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறியபடி, பயணியர், தங்கள் மொபைல் போன்களில் டார்ச் விளக்கை ஒளிரவிட்டு கொண்டாடினர். 'எளிய செயல்கள்கூட மக்களை ஒன்றிணைத்து, பண்டிகையை சிறப்பாக்கும்' என்பதை நிரூபிக்கும் வகையில், அவரது செயல் அமைந்தது. வீடியோவை கண்ட வலைதளவாசிகள், 'அற்புத யோசனை' என்று பாராட்டுகின்றனர்.
இந்தியாவில் கற்ற பாடம்; ஜெர்மானியர் நெகிழ்ச்சி
இந்தியாவில் ஓராண்டு தங்கிய ஜெர்மானியர் லுாகாஸ், நாட்டை விட்டுப் புறப்படும் கடைசி நாளில், டில்லி விமான நிலையத்தில் பதிவு செய்த வீடியோவில், தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். வந்த புதிதில் போக்குவரத்தும் வெப்பமும் திணறடித்ததாகவும், பின்னர் படிப்படியாகப் பழகிக்கொண்டதாகவும் கூறுகிறார் லுாகாஸ்.
'மகிழ்ச்சி, கோபம், துயரம் என எல்லா உணர்வுகளும் நிறைந்தது இந்தியா; அவை ஒரே தெருவில், ஒரே நிமிடத்தில்கூட வெளிப்படும்' என்கிறார், அவர். 'ஓர் இடத்தின் முக்கியம் அதன் இருப்பிடம் அல்ல, அங்குள்ள மனிதர்களே' என்று கூறிய லுாகாஸ், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து, விரைவில் மீண்டும் வருவதாக கூறியுள்ளார்.
தங்க நகையில் ரங்கோலி; துபாய் ஷோரூமில் அசத்தல்
துபாய் சிட்டி சென்டர் டெய்ராவில், தமாஸ் ஜூவல்லரி ஷோரூம் சார்பில் பிரமாண்டமான தங்க ரங்கோலி அமைக்கப்பட்டிருந்தது. தீபாவளியை முன்னிட்டு, இந்தியக் கலாசாரத்தையும் கைவினைத் திறனையும் கொண்டாடும் வகையில் இந்த ரங்கோலியை அமைத்திருந்தனர்.
நடிகை தமன்னா திறந்து வைத்த இந்த ரங்கோலி கோலம், 2க்கு 2 மீட்டர் அளவில் இருந்தது. 6.5 கிலோ எடை கொண்ட 213 தங்க நகைகள், ரங்கோலி அமைக்க பயன்படுத்தியிருந்தனர். பூ இதழ்களுக்குப் பதிலாக நெக்லஸ், வளையல், காதணி, மோதிரம் போன்ற தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. பார்க்கும் அனைவரையும் அசத்தும் வகையில் இந்த ரங்கோலி இருந்தது என்கின்றனர், வலைதளப்பிரியர்கள்.
