தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/'ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை'

'ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை'

'ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை'

4


ADDED : நவ 10, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : நவ 10, 2026 05:51 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படுகொலைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை விட, பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் விஜயை கண்டிக்கிறேன். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அவர்களை காக்க வேண்டிய போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழக மக்கள் சிந்தும் கண்ணீருக்கும், ரத்தத்துக்கும், இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தேர்தல் வியூக வகுப்பாளர்கள் மூன்று பேர் தான், த.வெ.க., ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் அனுபவம் இருக்கலாம்; ஆட்சி அனுபவம் இல்லை. நடப்பது எதுவும் முதல்வருக்கு தெரிவதில்லை. எப்படி ஆட்சி செய்வது என்று தெரியாமல், த.வெ.க., ஆட்சி நடக்கிறது. முதல்வர் யாரையும் சந்திப்பதில்லை; தொழில் துறையினர் மற்றும் மக்கள் பிரச்னைகளும் தெரிவதில்லை.

பா.ம.க., தலைவர் அன்புமணி: தீபாவளி தினத்தன்று நடந்த பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவே காரணம். இதை கருத்தில் கொண்டு தான், முழு மதுவிலக்கு வரும் வரை, பண்டிகை நாட்களில் ஒரு வாரத்திற்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என, பா.ம.க., வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதை கண்டுகொள்ளாததன் விளைவு தான், இந்த படுகொலைகள்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சட்டம் - ஒழுங்கு தான் மிகவும் முக்கியமானது. இதே நிலை நீடித்தால், தமிழகம் குறித்து வெளி உலகில் தவறான பெயர் ஏற்பட்டு விடும். இதை தடுக்க, தமிழகத்தில் சட்டம் - -ஒழுங்கை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழக அரசும், காவல் துறையும் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தலைநகர் சென்னையில் தொடங்கி, கடைக்கோடி மாவட்டங்கள் வரை, படுகொலை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கிற்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி என்பதை இனியாவது உணர்ந்து, அதலபாதாளத்தில் இருக்கும் சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தேனியில் சாலையில் வெடி வெடித்தவர்களை கண்டித்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மது போதை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து, தமிழக மக்களையும், காவல் துறையினரையும் பாதுகாக்கும் நடவடிக்கை களில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும், பல கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில், மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரை கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதல்வர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தேனி சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்து பட்டாசு வெடித்தவர்களை தட்டிக் கேட்டதற்காக, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவர்? மக்களை காக்கும் காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை என்ற அளவுக்கு தமிழக சூழல் தள்ளப்பட்டிருப்பது, பொது அமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறி.

'வீ த லீடர்ஸ்' அமைப்பின் பொதுச்செயலர் அஸ்பயர் சுவாமிநாதன்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலைகள் நடந்துள்ளன. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாக கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையா அல்லது மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையா; இது தான் தமிழக மக்கள் எதிர்பார்த்த ஆட்சியா?

இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து: தமிழகத்தில் தீபாவளி அன்று, ஒரே நாளில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும், உறுதியான சட்ட நடவடிக்கையையும் பாரபட்சமின்றி எடுக்க வேண்டும்.

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தேனியில் கொலையான எஸ்.ஐ., குடும்பத்திற்கு, 40 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமை அல்ல. இது போன்ற உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே, உண்மையான பொறுப்பு. சிறை களில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதும், காவல் துறையினரே வன்முறைக்கு பலியாவதும், தமிழகத்தின் சட்டம் -- ஒழுங்கு நிலை குறித்து, கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பண்டிகைக்கு கொலைகள் நடப்பது புதிதல்ல: அமைச்சர் விளக்கம்


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தீபாவளி பண்டிகை நாளில், தமிழகத்தில் முதன் முறையாக, ஒரே நாளில் படுகொலைகள் நடந்தது போன்ற மாயத் தோற்றத்தை எதிர்க் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, ஆறு படுகொலை சம்பவங்கள் அரங்கேறின. அதற்கு முந்தைய ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று, 11 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
பண்டிகை நாட்களில், இது போன்ற சம்பவங்கள் புதிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், திட்டமிட்டு, ஆளும் அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிடுகின்றனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிரிக்கட்சியினராக செயல்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். மிகப் பெரிய ரவுடிகளை, காவல்துறையினர் சுட்டுப் பிடிக்கின்றனர்; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்கின்றனர். துணை சபாநாயகர் ரவிசங்கரன் மீதான குற்றச்சாட்டில், அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: கடந்த கால புள்ளிவிபரங்களை கூறி, அமைச்சர் சமாளித்திருக்கிறார். உண்மையில், தமிழகத்தில் கொலைகள், குறிப்பாக திட்டமிட்ட பழிவாங்கும் கொலைகள் நடந்து வருகின்றன. இவை, அச்சமூட்டுவதாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளன. இதற்கு முன்பும் கொலைகள் நடந்துள்ளன என்பது போன்ற புள்ளி விபரங்களால், மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us