'கஞ்சா' சிறார்களால் கொடூரமாக வெட்டப்பட்ட வாலிபர்; அவசர அவசரமாக ஒடிஷாவுக்கு அனுப்பி வைப்பு
'கஞ்சா' சிறார்களால் கொடூரமாக வெட்டப்பட்ட வாலிபர்; அவசர அவசரமாக ஒடிஷாவுக்கு அனுப்பி வைப்பு
ADDED : டிச 31, 2025 04:25 AM

சென்னை: கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட ஒடிஷா வாலிபர், சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு வந்த நிலையில், அவசர அவசரமாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ், 20. இவர், கடந்த 27ம் தேதி, திருத்தணி ரயில் நிலையம் அருகே, உடல் முழுதும் வெட்டுக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் கிடந்தார். திருத்தணி போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
போதையில் இருந்த நான்கு சிறுவர்கள், ஒடிஷா வாலிபரை சரமாரியாக வெட்டும் காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்தது.
இதையடுத்து, திருத்தணி, அரக்கோணத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் போதை கலாசாரம் பெருகிவிட்டதையே,இந்த சம்பவம் காட்டுவதாக, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, ஒடிஷா வாலிபர் சுராஜ், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வெட்டுக்காயங்கள் அதிகம் உள்ளதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர்.
நேற்று காலை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, டாக்டர்கள் பரிசோதித்து, உள்நோயாளியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
ஆனால், அவர் மருத்துவ மனையில் இல்லை. தன் விருப்பத்தின்பேரில், அவர் சென்று விட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐ. ஜி., அஸ்ரா கர்க் கூறுகையில் , ''ஒடிஷா வாலிபர், அவரது விருப்பத்தின்படி, டாக்டர்களிடம் எழுதி கொடுத்துவிட்டு, சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அது, அவரின் தனிப்பட்ட விருப்பம். இங்கேயே தான் சிகிச்சை பெற வேண்டும் என, அவரை கட்டாயப்படுத்த முடியாது,'' என்றார்.
இந்த விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில், வாலிபர் அவசர அவசரமாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக, அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

