வாக்குறுதிகளுக்கு 'மோடி காரன்ட்டி'; அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆலோசனை
வாக்குறுதிகளுக்கு 'மோடி காரன்ட்டி'; அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆலோசனை
ADDED : டிச 31, 2025 04:33 AM

சென்னை: 'தமிழக சட்டசபை தேர்தலில், பல்வேறு புதிய அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடுமாறும், அதை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு உதவி செய்யும்' எனவும், அ.தி.மு.க., தலைமைக்கு பா.ஜ., மேலிடம் ஆலோசனை வழங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடும் அதிருப்தி இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.
தேர்தலில் வெற்றி பெற்று அக்கட்சி ஆட்சி அமைக்க இந்த வாக்குறுதி முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு பின், 2023 செப்டம்பரில் தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.
அனைத்து மகளிருக்கும் என வாக்குறுதி அளித்துவிட்டு, 1.15 கோடி பேருக்கு தான் வழங்கப்படுகிறது. ஐந்து சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக்கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட, எந்த வாக்குறுதியும் முழுதுமாக நிறைவேற்றப்படவில்லை.
இதற்கு, தி.மு.க.,அரசின் நிர்வாகத் தோல்வியே காரணமாகக் கூறப்படுகிறது. கூடவே, தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமைக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
வாக்குறுதிகளை தி.மு.க., அரசு முழுதுமாக நிறைவேற்றாததால், அக்கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதேசமயம், மஹாராஷ்டிரா, ம.பி., என, பா.ஜ., ஆளும் மாநிலங்களில், தமிழகத்தை விட கூடுதலாக மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழில் துவங்க கடன் உட்பட பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இது தொடர்பான அறிவிப்புகளை, பா.ஜ., தரப்பு தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளாக அறிவித்ததாலேயே, அந்த மாநிலங்களில் பா.ஜ.,வினர் கூடுதல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.
பிரதமராக மூன்றாவது முறை மோடி பொறுப்பேற்றுள்ளார். இதற்கு, அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பிரதான காரணம். அதோடு, மத்தியில் ஸ்திரத்தன்மையோடு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால், பிரதமர் மோடியால் நினைத்த மாத்திரத்தில் நிதி உள்ளிட்ட பல விஷயங்களில், எந்த மாநிலத்துக்கும் உதவிகளை செய்ய முடியும்.
நிதியுதவி எனவே, 'வரும் தமிழக சட்டசபை தேர்தலில், மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் நிதியுதவி, தாலிக்கு தங்கம், தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட, மக்கள் பயன்பெறும் வகையில் வாக்குறுதிகளை வெளியிடுங்கள்.
'இதற்கான நிதி ஆதாரம் குறித்து கவலையே பட வேண்டாம். இது தொடர்பாக யார் விமர்சனம் செய்தாலும், அ.தி.மு.க., அளிக்கும் வாக்குறுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 'காரன்ட்டி' அளித்துள்ளார்.
'மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கையோடு சொல்லுங்கள்' என பதிலளிக்குமாறு, அ.தி.மு.க., தலைமைக்கு பா.ஜ., தரப்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

