அ.தி.மு.க., சீட்டுக்கு 30 கோடி: கட்டுப்படியாகாது என மா.செ.,க்கள் புலம்பல்!
அ.தி.மு.க., சீட்டுக்கு 30 கோடி: கட்டுப்படியாகாது என மா.செ.,க்கள் புலம்பல்!
UPDATED : ஜன 09, 2024 07:03 AM
ADDED : ஜன 09, 2024 06:56 AM
பா.ஜ., உறவை முறித்துக் கொண்ட, அ.தி.மு.க., பொதுச்செயலரான பழனிசாமி, வரும் லோக்சபா தேர்தலில், மிகப் பெரிய கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக கூறியிருக்கிறார். ஆனால், எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை.
ஏற்கனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை, பா.ஜ., பக்கம் சாய்ந்துள்ளன. த.மா.கா.,வும் புதிய தமிழகமும், எந்த முடிவும் எடுக்கவில்லை. புரட்சி பாரதம் மட்டும், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறது.
பா.ம.க., - தே.மு.தி.க., - நாம் தமிழர் கட்சிகளை, கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., முயற்சித்து வருகிறது. அதோடு, தி.மு.க., கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டு, வெளியேறும் கட்சிகள் தம்மை நோக்கி வரும் என்றும், பழனிசாமி காத்திருக்கிறார்.
ஆனால், பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தனித்து செயல்படுவதால், அ.தி.மு.க., பக்கம் திரும்ப, சில கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதேநேரத்தில், முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டு சேர, அ.தி.மு.க.,வுக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில், லோக்சபா தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை, பழனிசாமி துவக்கி உள்ளார். 'போட்டியிட விரும்புவோர், கட்சிக்கு, 30 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். தேர்தல் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்வோருக்கே சீட்' என, சில நிபந்தனைகளை அவர் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
'அதுபோன்றவர்களை மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் பரிந்துரை செய்தால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இல்லையெனில் கட்சி தலைமையே தேர்வு செய்யும். அவர்களுக்கு மாவட்ட செயலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்சியை சாராத, பண பலமிக்க பிரபலங்கள் போட்டியிட விரும்பினாலும், கட்சியில் சேர்க்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படும்' என்றும் பழனிசாமி தரப்பு கூறுவதாக தெரிகிறது.
இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர்களே பெரும்பாலும், மாவட்ட செயலர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை, தேர்தலில் நிறுத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், கட்சிக்கு 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் செலவு முழுதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை கேட்டதும், பின்வாங்கி விட்டனர். அடுத்தவருக்காக கோடிக்கணக்கில் செலவழிக்க, அவர்களுக்கு என்ன பைத்தியமா?
அரசியலுக்கு புதியவராக இருந்தாலும், கட்சிக்கு அப்பாற்றப்பட்டவராக இருந்தாலும், பணம் இருந்தால் அரவணைப்போம் என கூறியிருப்பது தான், கட்சிக்குள் அனலை கிளப்பியிருக்கிறது. எம்.ஜி. ஆரும் ஜெயலலிதாவும் அப்படிப் பார்த்தா சீட் கொடுத்தனர்? சாமானியரையும் ஜெயிக்க வைத்து மந்திரியாக்கினர். அப்படிப்பட்ட கட்சியில் இப்படியொரு நிபந்தனையா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -