ADDED : மார் 07, 2024 06:24 AM

பொள்ளாச்சி : அ.தி.மு.க., சாதனைகளை இளம் வாக்காளர்கள் பார்க்கும்படி 'சார்ட்ஸ்', 'ரீல்ஸ்' பதிவிட வேண்டும் என, தொழில்நுட்ப பிரிவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாக்காளர்கள் கவர அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.
அந்தவரிசையில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தொழில்நுட்ப பிரிவுகளை உருவாக்கி, பிரசாரத்தை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளன.
அ.தி.மு.க.,வில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தொழில்நுட்பட பிரிவு நிர்வாகிகளைக் கண்காணிக்கவே, தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தொகுதிக்கான அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: அ.தி.மு.க.,வில், 2கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உலக அளவில், ஏழாவது இடத்தில் பெரிய இயக்கமாக உள்ளது. தமிழகத்தில், பழனிசாமி கொண்டு வந்துள்ள திட்டங்களைத்தான் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதியில் எவரும், தி.மு.க., வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
இளைஞர் சமுதாயம் சீரழிய தி.மு.க., ஆட்சியே காரணம். தொழில்நுட்ப பிரிவினர், அ.தி.மு.க.,வின் சாதனை திட்டங்களை பட்டியலிட வேண்டும்.
யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பதிவிட வேண்டும். தி.மு.க., செய்ய தவறியவை குறித்து முதலில் பதிவிட வேண்டும்.
நடுநிலை பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், பிரபலமானர்கள் பேச்சு மற்றும் தி.மு.க., பா.ஜ.,வின் எதிர்மறை பேச்சுகளையும் அதிகம் பதிவிட வேண்டும். இளம் வாக்காளர்கள் பார்க்கும்படி 'சார்ட்ஸ்', 'ரீல்ஸ்' பதிவிட வேண்டும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், 'எக்ஸ்' பக்கங்களில் பழனிசாமியை 'லைக்' செய்து அதிகமானவர்களுக்கு பகிர வேண்டும். 'வாட்ஸ்ஆப்' பில் 'ஸ்டேடஸ்' வைக்க வேண்டும்.
தகாத வார்த்தைகளை தவிர்த்து, நாகரீகமாக பதிவிட வேண்டும். தேர்தல் முடியும் வரை, இத் தகைய பதிவுகளைக் கண்காணிக்க, தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

