ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வைத்த அ.தி.மு.க., தளவாய்சுந்தரம் பதவி பறிப்பு
ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வைத்த அ.தி.மு.க., தளவாய்சுந்தரம் பதவி பறிப்பு
UPDATED : அக் 09, 2024 04:48 AM
ADDED : அக் 08, 2024 10:47 PM

கன்னியாகுமரியில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை துவக்கி வைத்ததற்காக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரத்திடம் இருந்து, அமைப்பு செயலர், மாவட்டச் செயலர் பதவிகளை பறித்து, நடவடிக்கை எடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி.
தமிழகம் முழுதும், 58 இடங்களில் 6ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஊர்வலம் நடந்தது. அதில், ஈசாத்திமங்கலம் என்னும் இடத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் துவக்கி வைத்தார்.
இது, அக்கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., ஆதரவு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில் கலந்து கொண்டதுடன், அதை துவக்கி வைத்த செயல், அ.தி.மு.க., தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் வகித்து வந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலர் மற்றும் மாநில அமைப்பு செயலர் பதவிகள் பறிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தான் வகித்து வரும் கட்சி அமைப்பு செயலர், மாவட்ட செயலர் ஆகிய பொறுப்புகளில் இருந்து, தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -