ADDED : டிச 14, 2024 12:48 AM

புதுடில்லி: 'நீதிபதிகள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தீர்ப்புகள் குறித்து அவற்றில் கருத்து தெரிவிக்கக் கூடாது. துறவியர் போல நீதிபதிகள் வாழ வேண்டும்; குதிரைகள் போல வேலை செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
மத்திய பிரதேசத்தில் சிவில் நீதிபதிகளாக பணியாற்றிய ஜோதி வர்கடே, சுஸ்ரி சோனாக் ஷி ஜோஷி, சுஸ்ரி பிரியா சர்மா, ரச்சனா அதுல்கர் ஜோஷி, அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகிய ஆறு பெண் நீதிபதிகள், செயல்திறன் அடிப்படையில், 2023 நவ., 11ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களில், அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி தவிர மற்ற நான்கு பேர், சில நிபந்தனைகளின் அடிப்படையில் கடந்த ஆக., 1ல், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தால் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.
செயல்திறனில் முன்னேற்றம் இல்லாததால், அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகியோருக்கு பணி வழங்கப்படவில்லை என, ம.பி., உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதை எதிர்த்து, அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கின் 'அமிகஸ் கியூரி' எனப்படும், நீதிமன்றத்தின் ஆலோசகராக உள்ள வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், பணிநீக்கத்தை விமர்சித்து, சமூக வலைதளமான 'பேஸ்புக்'கில் பெண் நீதிபதி கருத்து தெரிவித்ததாகக் கூறினார்.
இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:
சமூக ஊடகம் ஒரு திறந்த தளம் போன்றது. அதை பயன்படுத்துவதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். மேலும், தீர்ப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது.
நீதிபதிகள், துறவியரை போல வாழ்க்கையை வாழ வேண்டும்; குதிரையை போல வேலை செய்ய வேண்டும். இத்தனை தியாகங்களை நீதிபதிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

