இலக்கை நிறைவேற்றாத அதிகாரிகளை திட்டித் தீர்த்த வேளாண் இயக்குநர்; பரவும் வீடியோவால் சர்ச்சை
இலக்கை நிறைவேற்றாத அதிகாரிகளை திட்டித் தீர்த்த வேளாண் இயக்குநர்; பரவும் வீடியோவால் சர்ச்சை
UPDATED : ஆக 23, 2025 08:53 AM
ADDED : ஆக 23, 2025 08:42 AM

சென்னை: அரசு நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றாத அதிகாரிகளை, வேளாண் துறை இயக்குநர் கடுமையாக திட்டிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு உத்தரவுபடி, விவசாய நிலங்கள், பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம், கடன் மற்றும் காப்பீடு போன்ற தகவல்களை, 'டிஜிட்டல்' முறையில் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வருவாய் துறை மேற்கொள்ள வேண்டிய இப்பணிகள், வேளாண் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இதனால், வேளாண் பணிகளுடன் கூடுதலாக இப்பணிகளை, வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 'டிஜிட்டல்' பயிர் சர்வே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆய்வு கூட்டம்
பல மாவட்டங்களில், வேளாண் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி இலக்கை முடிக்க முடியாமல், வேளாண் துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், திட்டம் செயலாக்கம் தொடர்பாக, மாவட்ட வேளாண் இணை, துணை இயக்குநர்களுடன், வேளாண் துறை இயக்குநர் முருகேஷ், சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், திட்டம் எந்த அளவிற்கு செயலுக்கு வந்துள்ளது; ஒரு மாதத்திற்கான இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்று முருகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, வேளாண் இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மழுப்பலாக பதில் கூறியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த முருகேஷ், அதிகாரிகளை வறுத்தெடுத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: உங்களால் முடிக்க முடியவில்லை என்றால், சொல்லி விடுங்கள். இணை இயக்குநர் பொறுப்பில் இருந்து வெளியே வந்து விடுங்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன்.
நொண்டி சாக்கு
மாவட்டங்களில் இலக்கை பூர்த்தி செய்து காட்ட வேண்டும்; அதை செய்யாமல், என் முன் வந்து நிற்காதீர்கள். விளக்கம் கேட்டால், முட்டாள் மாதிரி பேசுகிறீர்கள். கடந்தாண்டு மழைக் காலத்தில், குடையை பிடித்துக் கொண்டு மாணவர்கள் இந்த கணக்கெடுப்பை முடித்தனர். இப்போது மழை பெய்கிறது என லொட்டு, லொசுக்கு என்று நொண்டி சாக்கு சொல்கிறீர்கள்.
நாட்களை தின்று கொண்டு இருக்கிறீர்கள். பன்றி மாதிரி என் உயிரை வாங்குகிறீர்கள். சனிக்கிழமையில் இருந்து, நான் கத்திக் கொண்டே இருக்கிறேன். எந்த மாவட்டத்தில் வேளாண் உதவி அலுவலர்கள் இப்பணியை செய்வதில்லையோ, அவர்களுக்கு, 'மெமோ' கொடுங்கள். அடுத்தமுறை ஆய்வு கூட்டத்திற்கு வரும் முன், விபரங்களை இ - மெயிலில் அனுப்பி விட்டு வந்து உட்கார வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
சர்ச்சை, விவாதம்
இக்கூட்டத்தில், வேளாண் இயக்குநர் முருகேஷ் காட்டமாக பேசியதை, ஒருவர் வீடியோ எடுத்து, வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அது, சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 'சரியாக வேலை செய்ய வில்லை என்பதற்காக தான், அவரே திட்டுகிறார்; அதையும் வீடியோ எடுத்து வெளியிடுகிறீர்களே தவிர, வேலை செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள்' என, 'நெட்டிசன்' ஒருவர் பதிவிட்டுள்ளார்.