செங்கொடியை ரூ.25 கோடிக்கு அடகு வைத்த அறிவாலய வித்வான்; கம்யூ., முத்தரசன் மீது அ.தி.மு.க., தாக்கு
செங்கொடியை ரூ.25 கோடிக்கு அடகு வைத்த அறிவாலய வித்வான்; கம்யூ., முத்தரசன் மீது அ.தி.மு.க., தாக்கு
ADDED : ஆக 07, 2025 04:22 AM

சென்னை: 'செங்கொடியை 25 கோடி ரூபாய்க்கு அடகு வைத்த, அறிவாலய வித்வான்' என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசனை, அ.தி.மு.க., மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:
இ.கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன், அவர் சார்ந்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியை உணராதவர்.
பயிர் காப்பீடு வழங்காதது பற்றி கூட, தி.மு.க., அரசை எதிர்த்து கேட்காமல், அடிமையாக இருக்கும் மவுனப் புரட்சியாளர். தி.மு.க., அரசைப் பற்றி, தப்பித் தவறி, ஒரு வார்த்தை கூட விமர்சித்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.
தங்கள் இயக்கத்தின் கொள்கை வேர்களான தொழிற்சங்கங்கள் போராடினால் கூட, அசராமல், தி.மு.க.,வுக்கு முட்டு கொடுப்பவர்.
அறிவாலயத்தின் நிலைய வித்வான்களிலேயே, மிகச் சிறந்தவராக, தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.
அப்படிப்பட்ட முத்தரசன், காட்டிக் கொடுப்பதைப் பற்றி பேசுகிறார். திடீரென்று இப்படி பொங்குவதற்கு, அறிவாலயத்தில் ஏதேனும் சிறப்பு 'பேமன்ட்' உண்டோ?
'கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆன கதையாக, 'கம்யூனிஸ்ட் என்றால் என்ன' என மக்கள் கேட்கும் அளவிற்கு கட்சி, கொள்கையை தேயவிட்ட முத்தரசன் போன்றோர், தோழர் என்ற சொல்லுக்கே இழுக்கு.
தி.மு.க.,விடம் 25 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு, கட்சியின் செங்கொடியை அடகு வைத்து, கம்யூனிஸத்தை காட்டிக் கொடுத்த கம்யூனிஸ்டுகளை, மக்களிடம் நாங்கள் காட்டிக் கொடுக்கிறோம்.
இ.கம்யூ., இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., அரசின் உருட்டுகளையும், திருட்டுகளையும் மக்களிடம் இன்னும் காட்டிக் கொடுப்போம். தி.மு.க.,வையும், மக்களை ஏமாற்றும் அதன் துரோகக் கூட்டணியையும் தொடர்ந்து காட்டிக் கொடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.