விவசாயியாக அ.தி.மு.க., நிர்வாகி 'ஆக்டிங்'; பழனிசாமி கடும் கோபம்
விவசாயியாக அ.தி.மு.க., நிர்வாகி 'ஆக்டிங்'; பழனிசாமி கடும் கோபம்
UPDATED : பிப் 13, 2026 10:04 AM
ADDED : பிப் 13, 2026 06:09 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், பயிர்கள் பாதிப்பு குறித்து பார்வையிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை நோக்கி, 'விவசாயிகளை காப்பாற்றுங்கள்' என, 'பசுமையான' பயிர்களுடன் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் ஓடிவந்த நிகழ்வு கேலியாக, மாறிப்போய் உள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த கட்சியினர் மீது, பழனிசாமி கோபமாக உள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.
தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, கடந்த 8ல் பார்வையிட்ட பழனிசாமி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயி ஒருவர், 'விவசாயிகளை காப்பாற்றுங்கள்' என கதறி அழுதுகொண்டே, நெற்பயிர்கள் மற்றும் மண்வெட்டியுடன் பழனிசாமியை நோக்கி ஓடி வந்து முறையிட்டார்.
இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்தோர் பலரும், அரசியல் கேலிக்கூத்து என மிகக் கடுமையாக பழனிசாமியை விமர்சித்து வருகின்றனர்.
பழனிசாமியை நோக்கி விவசாயியாக ஓடி வந்தவர், தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கலியராஜ் என்பதையும் குறிப்பிட்டு விமர்சிக்கின்றனர். இந்தத் தகவல் பழனிசாமிக்கு செல்ல, விவசாயியை ஏற்பாடு செய்த அ.தி.மு.க., நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

