பழனிசாமி தலைமையை ஏற்க அ.ம.மு.க., நிர்வாகிகள் மறுப்பு
பழனிசாமி தலைமையை ஏற்க அ.ம.மு.க., நிர்வாகிகள் மறுப்பு
ADDED : ஜன 19, 2026 05:09 AM

'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டோம்' என, அ.ம.மு.க., நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி இருப்பது, அக்கட்சி பொதுச்செயலர் தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. சட்டசபை தேர்தலிலும், கூட்டணியை தொடர அ.ம.மு.க., விரும்பியது.
பா.ஜ., முயற்சி
இந்நிலையில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டது. இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.ம.மு.க., வெளியேறியது. 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, எந்த காலத்திலும் முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்' என தினகரன் அறிவித்தார். அதை கண்டுகொள்ளாமல், கூட்டணிக்கு அ.ம.மு.க.,வை இழுக்க, பா.ஜ., முயற்சி மேற்கொண்டது.
அதற்கு பலன் கிடைத்துள்ளது. தினகரன் பேச்சில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'அ.ம.மு.க., எந்த கூட்டணியில் இணையும் என்பதை, அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி விரைவில் அறிவிக்கும்' என தினகரன் கூறியுள்ளார். வரும் 23ம் தேதி பிரதமர் மோடி, மதுராந்தகத்தில் நடக்க உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களை பங்கேற்க வைக்க, பா.ஜ., தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தினகரனை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தினகரன் ஒப்புக் கொண்ட நிலையில், 'பழனிசாமி தலைமையிலான கூட்டணியை ஏற்கக்கூடாது' என, தினகரனுக்கு அவரது கட்சி நிர்வாகிகள் நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.
இது குறித்து, அ.ம.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பா.ஜ., தரப்பில் நடந்த கூட்டணி பேச்சில், அ.ம.மு.க.,வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி வழங்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அ.தி.மு.க., தரப்பில், ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதி ஒதுக்கப்படும் என அ.ம.மு.க.,விடம் கூறியுள்ளனர். இதனால், அ.ம.மு.க., நிர்வாகிகள் பலருக்கும் போட்டியிட வாய்ப்பில்லாமல் போகும்.
அதோடு, பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அவர் தலைமை வகிக்கும் கூட்டணியில் இடம் பெற்றால், அ.ம.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், அ.தி.மு.க.,வினரே முன் நின்று தோற்கடிப்பர்.
லாபம் இல்லை
அதோடு, தன் அரசியல் லாபத்துக்காக சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து ஒதுக்கி துரோகம் செய்தவர் பழனிசாமி. எனவே, அவர் தலைமையிலான கூட்டணியில் இணைந்து , அவரை வெற்றி பெற வைத்து முதல்வராக்குவதால், அ.ம.மு.க.,வினருக்கு லாபம் இல்லை.
எனவே, பழனிசாமி தலைமையை ஏற்கமாட்டோம் என, அ.ம.மு.க., நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாக எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது, தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மீறி கூட்டணி அமைத்தால், கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலரை, அவர் இழக்க வேண்டிய நிலை வரலாம். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

