அ.தி.மு.க., பொதுக்குழு நாளை கூடுகிறது; பிரிந்தவர்களை சேர்க்க விவாதம் நடக்குமா?
அ.தி.மு.க., பொதுக்குழு நாளை கூடுகிறது; பிரிந்தவர்களை சேர்க்க விவாதம் நடக்குமா?
ADDED : டிச 09, 2025 06:00 AM

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சென்னையில் நாளை(டிச.,10) நடக்கிறது.
அ.தி.மு.க., அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில், பொதுச்செயலர் பழனிசாமி, துணை பொதுச்செயலர்கள் முனுசாமி, விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன், தலைமை நிலைய செயலர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் வேறு கட்சிகள் இணையவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்குமாறு குரல் கொடுத்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சமீபத்தில் டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்களை கூட்டணியில் சேர்க்க, அமித் ஷா வலியுறுத்துவதாக கூறப் படுகிறது. எனவே கட்சியில் இருந்து பிரிந்து சென்றோரை, மீண்டும் இணைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவில்லை என பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், செல்லுார் ராஜு போன்றவர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். இது போன்ற சூழலில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது.

