போராடும் குணத்தை இழந்த அ.தி.மு.க.,: சட்டசபை கூட்டத்தை நெருக்கடியின்றி எதிர்கொண்ட தி.மு.க.,
போராடும் குணத்தை இழந்த அ.தி.மு.க.,: சட்டசபை கூட்டத்தை நெருக்கடியின்றி எதிர்கொண்ட தி.மு.க.,
ADDED : மே 01, 2025 05:39 AM

சட்டசபை தேர்தலுக்கு முந்தைய, சட்டசபை மானியக் கோரிக்கை கூட்டத் தொடரை, எவ்வித நெருக்கடியும் இல்லாமல், தி.மு.க., அரசு நடத்தி முடித்துள்ளது.
கடந்த மார்ச் 14 முதல் 30 நாட்கள் நடந்த, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., ஆட்சியில் கடைசியாக நடக்கும் முழு பட்ஜெட் கூட்டத் தொடர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ஆளும் தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச் 14ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல், கடைசியாக நடந்த காவல் துறை மானியக் கோரிக்கை வரை, பெரும் எதிர்ப்பை காட்டாமல் மென்மையான போக்கையே அ.தி.மு.க., கடைபிடித்தது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாக, சட்டசபையில் அ.தி.மு.க., மிகப்பெரிய வாத போராட்டத்தை நடத்தும் என, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூறி வந்தனர்.
ஆனால், டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச, சபாநாயகர் அனுமதி அளிக்காத நிலையில், அதை எதிர்த்து கோஷமிட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஒருநாள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பிறகு, மின்துறை மானிய கோரிக்கையின்போது, இப்பிரச்னையை எழுப்ப சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதற்கு வெளிநடப்பு செய்ததோடு. பிரச்னையை அ.தி.மு.க., முடித்துக் கொண்டது.
நெருக்கடி
ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, அத்துறை அமைச்சர் சேகர்பாபு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமாரை, ஒருமையில் கடுமையாக விமர்சித்தார். அப்போதும்கூட, சேகர்பாபு பதிலுரையை முடித்ததும் வெளிநடப்பு செய்ததோடு, அ.தி.மு.க., நின்று விட்டது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, கள்ளக்குறிச்சி செந்தில்குமார், வாணியம்பாடி செந்தில்குமார், கவுண்டம்பாளையம் அருண்குமார், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி உள்ளிட்ட ஒருசில அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களே, அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேசினர்.
நீதிமன்ற நெருக்கடிகளால் செந்தில் பாலாஜியும், பொன்முடியும் அமைச்சர் பதவியை இழந்தனர். ஹிந்து மதத்தையும், பெண்களையும் பொன்முடி இழிவுபடுத்தும் விதமாக பேசியது, தமிழகம் முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த இரு அமைச்சர்களுக்கும் எதிராக, அ.தி.மு.க., எவ்வித நெருக்கடியும் தரவில்லை. இத்தனைக்கும், ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாள் வரை, இருவரும் சட்டசபைக்கு வந்து கொண்டிருந்தனர். காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தி.மு.க., அரசை விமர்சித்து கடுமையாக பேசுவார், சட்டசபையே அமர்க்களப்படும் என, பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
வெளிநடப்பு
அதற்காக, வீட்டில் இரு நாட்கள், தன்னுடைய பேச்சை ஒத்திகை பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், வழக்கம்போல் சட்டம் -- ஒழுங்கு பிரச்னைகளை பட்டியலிட்டதோடு, பழனிசாமி நிறுத்திக் கொண்டார். கடைசியாக 'சவுக்கு' சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசியது, சட்டசபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்வதாக பழனிசாமி தெரிவித்தார். 'இதற்கெல்லாம் கோபித்துக் கொள்வதா?' என அமைச்சர் துரைமுருகன் கேட்டதும், அமைதியாகி தொடர்ந்து பேசினார்.
இப்படி சிறு சிறு வெளிநடப்புகள், சிறு சிறு சலசலப்புகள் தவிர, பெரிய அளவில் அ.தி.மு.க., தனது எதிர்ப்பைக் காட்டவில்லை. கடந்த 2006-- 2011 தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க., காட்டிய எதிர்ப்பை பார்த்தவர்களுக்கு, இன்றைய சூழல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தி.மு.க.,வை எதிர்க்கவே பிறந்த அ.தி.மு.க., இன்று, தி.மு.க.,வை எதிர்த்து தன்னுடைய போராடும் குணத்தை இழந்து விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, அக்கட்சியினரே கவலை தெரிவிக்கின்றனர்.
- நமது நிருபர் -