தி.மு.க.,வுக்கு போட்டி அ.தி.மு.க., தான்: சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி
தி.மு.க.,வுக்கு போட்டி அ.தி.மு.க., தான்: சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி
ADDED : ஜன 02, 2026 02:52 AM

சென்னை: ''அ.தி.மு.க., தான் எங்களுக்கு போட்டி,'' என தி.மு.க., இளைஞரணி தலைவரும் துணை முதல்வருமான உதயநிதி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி: நீண்ட காலமாக தி.மு.க., வின் பிரதான போட்டியாளராக அ.தி.மு.க., இருந்தாலும், தற்போதைய நிலையில் தி.மு.க.,வுக்கு பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. அதே நேரத்தில், பலவீனமான நிலையில் அ.தி.மு.க., இருந்தாலும், அவர்களைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக பார்க்கிறோம். அவர்கள் தான் எங்கள் போட்டியாளர்.
பா.ஜ., மற்றும் அதன் அனைத்து 'பி டீம்'களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில், மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பா.ஜ., அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆனால், தமிழக மக்கள் பா.ஜ., சதியை அறிந்து அதை தோற்கடிப்பர்.
எங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் மதித்து, அவர்களது கருத்துகளை உள்வாங்கி கொள்கிறோம். ஆனால், தே.ஜ., கூட்டணியில் அனைத்து முடிவுகளும் டில்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுகின்றன. அதை, கூட்டணி கட்சிகளும் சந்தோஷமாக ஏற்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
எங்கள் கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணியை துவக்கி நீண்டகாலம் வழிநடத்தியவர். அந்த வகையில் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை புரிந்தே இருக்கிறார். கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க நான் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

