பிரிவினை, பாகுபாடு உணர்வுகளை அகற்றுவதே நல்லிணக்கம்: பாகவத்
பிரிவினை, பாகுபாடு உணர்வுகளை அகற்றுவதே நல்லிணக்கம்: பாகவத்
ADDED : ஜன 02, 2026 02:37 AM

ராய்ப்பூர்: ''ஜாதி, பணம், மொழி அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது. பிரிவினை, பாகுபாடு உணர்வுகளை அகற்றுவதே நல்லிணக் கம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
உத்தரகண்டின் டேராடூனில் எம்.பி.ஏ., படித்த திரிபுராவைச் சேர்ந்த மாணவர் அஞ்சல் சக்மாவை சீனர் எனக் கூறி, ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. தான் இந்தியன் எனக் கூறியும் ஏற்க மறுத்த கும்பல், அவரை தாக்கியது.
நம் அண்டை நாடான வங்கதேசத்திலும் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சோன்பைரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
ஒருவரின் மனதிலிருந்து பிரிவினை, பாகுபாடு உணர்வுகளை அகற்றி, அனைவரையும் நம் உறவினர்கள் என கருதுவதே நல்லிணக்கம். இந்த முழு நாடும் அனைவருக்கும் சொந்தமானது; இந்த உணர்வே உண்மையான சமூக நல்லிணக்கம். அனைவரும் எளிதில் அணுகும் வகையில், வழிபாட்டு தலங்கள் இருக்க வேண்டும். ஜாதி, பணம், மொழி அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது.
ஹிந்துக்களாகிய நாம், நம் தனிப்பட்ட வாழ்க்கை யிலோ அல்லது தேசத்திலோ பிரச்னையை கண்டால், அதைப் பற்றி விவாதிப்பதை தவிர்த்து, அதற்கான தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும். நாம் உறுதியாக இருந்தால், எந்த நெருக்கடியும் நம்மை அண்டாது.
ஹிந்து சமூகத்திடம் அத்தகைய அறிவுத்திறன் உள்ளது. எந்த ஹிந்துவும் தங்களுக்குள் பாகுபாடு காட்டக்கூடாது. சமூகத்தில் நிலவும் நம்பிக்கையின்மையால் தான் மதமாற்றங்கள் நடக்கின்றன. இந்த நிலையை மாற்ற, அடித்தட்டு மக்களுடன் தொடர்பு கொள்வது அவசியம். சமூக ஒற்றுமையைப் பேணுவதில் நம்பிக்கையும், புரிதலும் மிக அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

