விஜய் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால் த.வெ.க.,வுடன் கைகோர்க்க அ.தி.மு.க., தயார்
விஜய் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால் த.வெ.க.,வுடன் கைகோர்க்க அ.தி.மு.க., தயார்
ADDED : அக் 06, 2025 12:48 AM

த.வெ.க., தலைவர் விஜய் கைது செய்யப்பட்டால், தி.மு.க., அரசை எதிர்த்து, அக்கட்சி தொண்டர்கள் நடத்தும் ஆர்ப் பாட்டங்களில், அ,தி.மு.க., வினரும் பங்கேற்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக, அம்மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தள்ளுபடியானதால், அவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்நிலையில், கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று, தன் விசாணையை கரூரில் துவக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் போலீசாரிடம் உள்ள வழக்கு ஆவணங்கள், சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அடிப்படையில், விசாரணை துவங்கப்பட்டு உள்ளது. பொது மக்களின் நேரடி சாட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விஜயிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின், அவர் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு, அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.
'விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால், ஆதாரம் இருந்தால், கண்டிப்பாக கைது செய்யப்படுவார்' என, தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
எனவே, விஜய் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டால், அதை எதிர்த்து, மாநிலம் முழுதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போராட்டங்கள் நடத்த, த.வெ.க., மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், த.வெ.க., நடத்த திட்டமிட்டுள்ள அந்த போராட்டங்களில், அ.தி.மு.க., தொண்டர்களும் பங்கேற்று, விஜய்க்கு ஆதரவாக அணிவகுக்க உள்ளனர்.
அதன் வாயிலாக, அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி உருவாக அச்சாரம் போடப்படும் என, அ.தி.மு.க., தரப்பு நம்புகிறது.
பழனிசாமி மகன்
பேச்சு
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகன் மிதுன், சமீபத்தில் விஜய்க்கு நெருக்கமான ஒருவரிடம், கூட்டணி குறித்து பேச்சு நடத்தி உள்ளார். கரூர் சம்பவத்தின் போது, 'பாதுகாப்பு குறைபாடு தான் காரணம்; தி.மு.க., அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்' என, முதன்முதலில் பழனிசாமி தான் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதன் காரணமாக, தர்மபுரி, அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் , பழனிசாமி நடத் திய பிரசார கூட்டங்களில், த. வெ.க., வினர் தங்கள் கட்சி கொடி களுடன் பங்கேற்றனர்
- நமது நிருபர் -.