ஆசிரியர் பயிற்றுநர்கள் பற்றாக்குறை: அரசு திட்டங்களை கண்காணிப்பதில் சிக்கல்
ஆசிரியர் பயிற்றுநர்கள் பற்றாக்குறை: அரசு திட்டங்களை கண்காணிப்பதில் சிக்கல்
ADDED : அக் 06, 2025 12:26 AM

தமிழகத்தில், ஆசிரியர் பயிற்றுநர்கள் பற்றாக்குறை காரணமாக, அரசின் மாணவர் நலத் திட்டங்கள், பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டமும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமும் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள, 414 ஒன்றியங்களில், 3,510 குறுவள மையங்கள் இயங்கி வருகின்றன.
காலி பணியிடங்கள் ஒவ்வொரு குறுவள மையத்திலும், ஒரு ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் உள்ளது. அந்த வகையில், ஒரு குறுவள மையத்திற்கு உட்பட்டு, 10 முதல் 15 அரசுப் பள்ளிகள் உள்ளன.
இந்த அரசுப் பள்ளிகளில், தமிழக அரசின் மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து, ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், கற்றல் - கற்பித்தல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி வழங்குவர்.
ஆனால், தமிழகத்தில் மொத்தமுள்ள, 3,510 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில், 600 காலியாக இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நாமக்கல் உட்பட, 18 மாவட்டங்களில் உள்ள குறுவள மையங்களில், அதிகளவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. சில ஒன்றியங்களில், ஆசிரியர் பயிற்றுநர் இல்லாத நிலை உள்ளது.
இதனால், தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக, ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில், வட்டார வள மையம் மற்றும் குறுவள மையங்களுக்கு, 6,000 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடம் என, துவக்கத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது, 3,510 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அரசின் திட்டங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான நலத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்பு திறன் பயிற்சி, காலை உணவுத் திட்டம், 'ஹைடெக் லேப்3 ஆகியவை முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என கண்காணிக்க வேண்டியது, பயிற்றுநர்களின் பணி.
மறுக்கும் அரசு ஆனால், தற்போது தமிழகத்தில், 600 காலிப் பணியிடங்கள் உள்ளதால், இந்த கண்காணிப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 74 பணியிடங்களில், வெறும் 19 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
சில ஒன்றியங்களில், தலா 10 பேர் இருக்க வேண்டிய நிலையில், ஒருவர் மட்டுமே இருக்கிறார்; 9 பணியிடம் காலியாக உள்ளன. இதனால், 10 பள்ளிகளை கண்காணிக்க வேண்டிய ஒரு பயிற்றுநர், 60 பள்ளிகள் வரை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
வழக்கு உள்ளிட்ட காரணங்களை கூறி, பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப, அரசு மறுத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.