'தி.மு.க.,வுக்கு சொம்பு அடிப்பதே திருமாவளவனுக்கு வேலை': எச். ராஜா
'தி.மு.க.,வுக்கு சொம்பு அடிப்பதே திருமாவளவனுக்கு வேலை': எச். ராஜா
UPDATED : அக் 05, 2025 08:25 AM
ADDED : அக் 05, 2025 03:49 AM

சென்னை: ''ஆளும் தி.மு.க., அரசுக்கு சொம்பு அடிக்கிறது தவிர, வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு வேறு வேலை இல்லை. பட்டியல் சமூக மக்களுக்கு என்ன செய்து இருக்கிறார். அவர், அறிவாலய எடுபிடியாக இருக்கிறார்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
எச்.ராஜா நடித்துள்ள, கந்தன் மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
பின், ராஜா அளித்த பேட்டி: கரூரில் நடந்த மோசமான சம்பவத்தை விசாரிக்க, தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷனை நியமித்துள்ளது. மாற்று கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதில், அரசின் நடவடிக்கை மோசமாக உள்ளது. த.வெ.க., தலைவர் விஜயின் ஆறாவது கூட்டத்தை, கரூரில் நடத்த குறுகிய இடத்தை வழங்கியது ஏன்? புதுக்கோட்டை, வேங்கைவயலில் மலத்தை கலந்த நபர்களை கண்டுபிடிக்க முடியாத தகுதியற்ற அரசு தான் உள்ளது.
தி.மு.க., கரை வேட்டி கட்டாத ஒருவர் எஸ்.பி.,யாக உள்ள மாவட்டம் கரூர். அங்கே நடந்தது விபத்தா, பின்னணி இருக்கிறதா என்பது விசாரணையில் தெரிய வேண்டும். எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் மகேஷிடம் சிவாஜி கணேசன் தோற்று விட்டார்; என்ன நாடகம்?
விஜய் தாமதமாக வந்ததை குற்றம் என்று கூறலாமா; அதில் கிரிமினல் இல்லை. வேங்கைவயலில் எஸ்.சி., மக்கள் வசித்த பகுதியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்திற்கு, திருமாவளவன் நேரில் சென்றாரா?
ஆளும் தி.மு.க., அரசுக்கு சொம்பு அடிக்கிறது தவிர, திருமாவளவனுக்கு வேறு வேலை இல்லை. பட்டியல் சமூக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார். விழுப்புரம், சிதம்பரம் 'சீட்' வாங்க வி.சி., கட்சியை நடத்துகிறார். அறிவாலய எடுபிடியாக இருக்கிறார் திருமாவளவன். இவ்வாறு அவர் கூறினார்.