அ.தி.மு.க., -- த.வெ.க., நெருக்கம்: தமிழக அரசியல் கட்சிகள் பீதி
அ.தி.மு.க., -- த.வெ.க., நெருக்கம்: தமிழக அரசியல் கட்சிகள் பீதி
ADDED : அக் 12, 2025 02:19 AM

சென்னை: அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் நெருங்குவது, பல கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறி, கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தனி அணி அமைத்த அ.தி.மு.க., மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டார்.
ஆனால், 'தானே முதல்வர் வேட்பாளர்' என்பதில் விஜய் உறுதியாக இருந்ததாலும், பா.ஜ., மேலிடத்தின் நெருக்குதல்களாலும், கடந்த ஏப்ரல் 11ல், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி உருவானது. அதன்பின், 'வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க., -- தி.மு.க., இடையேதான் போட்டி. எப்படி இருந்த கட்சி, இப்படி பா.ஜ.,விடம் சரணடைந்து விட்டது' என, அ.தி.மு.க.,வையும் விஜய் உரச துவங்கினார்.
இப்போது, கரூர் சம்பவத்தால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள விஜய், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்சி நடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், கூட்டணி குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, விஜய்க்கு வலை வீசி வரும் அ.தி.மு.க., இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, த.வெ.க.,வை இழுக்க முயற்சித்து வருகிறது. பழனிசாமியின் பிரசார கூட்டங்களில், த.வெ.க., கொடியுடன் பலர் பங்கேற்பதும், அதைப் பார்த்து உற்சாகம் அடைந்த அவர், 'பிள்ளையார் சுழி போட்டு விட்டனர் ' என பேசியதும், தமிழக அரசியலில் பரபரப்பாகி வருகிறது.
'அ.தி.மு.க., -- த.வெ.க., கூட்டணி அமைந்தால், அது மக்கள் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்' என, தி.மு.க.,வும், காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் நினைக்கின்றன.
'அ.தி.மு.க., பக்கம் விஜய் சென்று விட்டால் தனித்து விடப்படுவோம்' என்பதை உணர்ந்த அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ' த.வெ.க., வந்தால், பா.ஜ.,வை பழனிசாமி கழற்றி விட்டு விடுவார் ' என எச்சரித்துள்ளார்.
இதனால், த.வெ.க., கூட்டணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பழனிசாமி, கடைசி நேரத்தில் தங்களை கழற்றி விட்டு விடுவாரோ என்ற அச்சம், பா.ஜ.,வுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படி அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் நெருங்கி வருவது, தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., போன்ற கட்சிகளை மட்டுமல்லாது, பா.ஜ.,வையும் கலக்கமடையச் செய்துள்ளது.