மீண்டும் மீண்டும் கோளாறில் சிக்கும் 'ஏர் இந்தியா' விமானம்
மீண்டும் மீண்டும் கோளாறில் சிக்கும் 'ஏர் இந்தியா' விமானம்
ADDED : ஜூலை 24, 2025 12:36 AM

மலப்புரம்: கேரளாவின் கோழிக்கோடில் இருந்து, கத்தார் தலைநகர் தோஹாவிற்கு புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம், நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறங்கியது.
கேரளாவின் கோழிக்கோடில் இருந்து மேற்காசிய நாடான கத்தார் தலைநகர் தோஹாவுக்கு, நேற்று காலை 9:07 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணியர், பணியாளர்கள் என மொத்தம் 188 பேர் இருந்தனர். புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
விமானத்தின், 'கேபின் ஏசி'யில் கோளாறு ஏற்பட்டதை கண்டறிந்த விமானி உடனடியாக தரையிறக்க முடிவு செய்தார். இதன்படி, காலை 11:12 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. இதையடுத்து, பயணியர் அவசரமாக இறக்கி விடப்பட்டனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் மதியம் 1:30 மணிக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணியர் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானத்தில் பெரிய கோளாறு இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தரையிறக்கப்பட்டதாகவும் ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.