பாக்.,கை கதறவிட்ட வான் பாதுகாப்பு கவசம் 'ஆகாஷ்தீர்': உள்நாட்டில் தயாரான புத்திசாலி போர்வீரன்
பாக்.,கை கதறவிட்ட வான் பாதுகாப்பு கவசம் 'ஆகாஷ்தீர்': உள்நாட்டில் தயாரான புத்திசாலி போர்வீரன்
ADDED : மே 18, 2025 12:38 AM

புதுடில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு கவசமான, 'ஆகாஷ்தீர்' பாகிஸ்தானின் தாக்குதலை சாதுர்யமாக முறியடித்து, நம் படையினருக்கு பெருமை சேர்த்தது. 'இது, உலகம் இதுவரை கண்டிராத புத்திசாலித்தனமான அசுரன்' என, நம் ராணுவ அமைச்சகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் களமிறங்கியதோடு, நம் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லையோர ராணுவ தளங்கள், மக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறி வைத்து 'ட்ரோன்'கள், ஏவுகணைகளை வீசியது.
இதையடுத்து, மே 9 நள்ளிரவு முதல் மே 10 அதிகாலை வரை, நம் பாதுகாப்பு படையினர், 'ஆகாஷ்தீர்' வான் பாதுகாப்பு கவசத்தை களமிறக்கி, பாக்.,கை திக்குமுக்காடச் செய்தனர்.
தாக்குதல்
பாக்., ஏவுகணைகளை விண்ணிலேயே சிதறடித்ததோடு பாக்.,கின் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள், ரேடார் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மையங்கள் என, 13 இலக்குகளை நம் படையினர், சல்லி சல்லியாக நொறுக்கினர்.
பாக்., தரப்பின், சீன இறக்குமதி பாதுகாப்பு கவசங்களான 'ஹெச்க்யூ 9', 'ஹெச்க்யூ 16' ஆகியவற்றால் இந்திய தாக்குதல்களை தடுக்க முடியவில்லை.
நம் ராணுவத்தின், 'ஆகாஷ்தீர்' தீரத்துடன் ஆதிக்கம் செலுத்தியதால், மே 10 நண்பகலிலேயே போர் நிறுத்தத்துக்கு பாக்., பதறியபடி ஓடி வந்தது.
இந்த நிலையில், 'ஆகாஷ்தீர்' குறித்து நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இருண்ட வானில்கூட, விழிப்புடன் இருக்கும் போர்வீரன் என, 'ஆகாஷ்தீர்' பாதுகாப்பு அமைப்பை கூறலாம். போர் விமானம் போல் கர்ஜனையோ, ஏவுகணை போல் மின்னவோ செய்யாது. ஆனால், கண்ணுக்கு தெரியாத தானியங்கி வான் கவசமான இது, எதிரியின் ஒவ்வொரு ட்ரோன், ஏவுகணை, போர் விமானத்தை கவனித்து, மிகச் சரியாக கணக்கிட்டு, துல்லியமாக தாக்கியது.
உலகில் இதுவரை பயன்பாட்டில் உள்ள வான் பாதுகாப்பு மற்றும் தடுப்பு அமைப்புகளை விட, வேகமாக கண்காணித்து, முடிவு எடுத்து, தாக்குவதில் சிறந்தது 'ஆகாஷ்தீர்' என்பது நிரூபணமாகி விட்டது. 'ஆகாஷ்தீர்' மிருகத்தனமான சக்தி உடையது மட்டுமல்ல; புத்திசாலித்தனமான போர்வீரன்.
கண்காணிப்பு
பல்வேறு வழிகளில் தரவுகளை சேகரித்து, அவற்றை போரில் சம்பந்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறை, ரேடார்கள், எதிர் தாக்குதலுக்கான பாதுகாப்பு படை என, அனைத்து தரப்புக்கும், அந்த நேரத்தின் சேட்டிலைட் படத்துடன் அவ்வப்போது வழங்கி, அந்த நேரத்துக்கேற்ற முடிவுகளை எடுக்கும்.
'சி4ஐஎஸ்ஆர்' எனப்படும் கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கம்ப்யூட்டர், நுண்ணறிவு, கண்காணிப்பு, உளவு ஆகிய கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்த பரந்து விரிந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இது.
தரையில் நிரந்தரமாக இருக்கும் ரேடார் மற்றும் மனித முடிவுகளை நம்பி இருக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் போல் இது கிடையாது. நகரும் விதத்திலான வாகன அடிப்படையில் இருப்பதால், பதற்றமான சூழலிலும் எளிதாக கையாள முடிகிறது.
போர்க்களத்தில், குறைந்த அளவிலான வான்வெளியை கூட கண்காணித்து, தானாகவே வான் பாதுகாப்பை கட்டுப்படுத்தும். முப்படைகளுடனான இதன் ஒருங்கிணைப்பு, வேறு எவற்றுடனும் ஒப்பிட முடியாது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.